Published : 09 Sep 2014 10:40 AM
Last Updated : 09 Sep 2014 10:40 AM

வேலூர், தி.மலை மாவட்டத்தில் 151 பேர் போட்டியின்றி தேர்வு: 58 உள்ளாட்சி பதவிகளுக்கு 18-ம் தேதி தேர்தல்

வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு 151 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 58 பதவிகளுக்கு வருகிற 18-ம் தேதி தேர்தல் நடக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 95 பதவிகளுக்கு 213 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். திங்கள்கிழமை இறுதி வேட்பாளர் பட்டியல் வௌயிடப்பட்டது. 66 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. 63 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இறுதியாக 32 பதவிகளுக்கு 79 பேர் போட்டியிடுகின்றனர்.

அரக்கோணம் நகராட்சி தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் கண்ணதாசன், சி.பி.ஈஸ்வரன், ஆனந்தன், நரேஷ்குமார், சுரேகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். வாணியம்பாடி நகராட்சியில் 35-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 3 பேர் போட்டியிடுகின்றனர். பேரூராட்சிகளில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். திமிரி 14-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 4 பேர் களத்தில் உள்ளனர்.

கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் 1-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் வனஜா, 19-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் சின்னபையன் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர். 8-வது வார்டுக்கு அதிமுக வேட்பாளர் மகாலிங்கம், பாஜக வேட்பாளர் மனோஜ்குமார், சுயேச்சைகள் சக்திவேல், லட்சுமி ஆகியோர் களத்தில் உள்ளனர். 4 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 10 பேர் போட்டியிடுகின்றனர். 82 கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளில் 58 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 24 பதவிக்கு 53 பேர் களத்தில் உள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள 115 உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளன. வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல், திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டது. மாவட்ட கவுன்சிலர் (31-வது வார்டு) பதவிக்கு அதிமுக சார்பில் அர்ஜூனன், பாஜக சார்பில் முத்துசாமி மற்றும் சுயேச்சைகள் அன்பரசு, ரசூல் ஆகிய 4 பேர் போட்டியிடுகின்றனர்.

போளூர் ஒன்றியம் கட்டிப்பூண்டி, சேத்துப்பட்டு ஒன்றியம் கரையாம்பூண்டி, தண்டராம்பட்டு ஒன்றியம் ராயண்டபுரம், அனக்காவூர் ஒன்றியம் அத்தி, வந்தவாசி ஒன்றியம் எரமலூர், வெம்பாக்கம் ஒன்றியம் திருப்பனங்காடு, பெரணமல்லூர் ஒன்றியம் நல்லடிசேனை, ஆரணி ஒன்றியம் சேவூர், ஆதனூர் ஆகிய 9 ஊராட்சிமன்ற தலைவர்கள் பதவிக்கு 27 பேர் போட்டியிடுகின்றனர். மேலும், 16 ஊராட்சிமன்ற உறுப்பினர் பதவிக்கு 35 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 26 உள்ளாட்சி பதவிகளுக்கு 66 பேர் போட்டியிடுகின்றனர்.

துரிஞ்சாபுரம் ஒன்றியம் 17-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் சக்தி, சேத்துப்பட்டு ஒன்றியம் 5-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் துரைராஜ், ஆரணி நகராட்சி 18-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் சந்திரா, சேத்துப்பட்டு பேரூராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் பாண்டியன், 9-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் ரவி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், ஊராட்சிமன்ற தலைவர் பதவிகளுக்கு திருவண்ணாமலை ஒன்றியம் கணத்தம்பூண்டியில் சுமதி அன்பழகன், மேற்கு ஆரணி ஒன்றியம் அப்பநல்லூரில் கவிதா பிரகாஷ், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சிறுநாத்தூரில் பிரேமா ஜெயசங்கர், கலசபாக்கம் ஒன்றியம் கெங்களமாதேவியில் அருள்மொழி முருகன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும், 79 ஊராட்சிமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வாகின்றனர். தி.மலை மாவட்டத்தில் 88 இடங்களுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர், தி.மலை மாவட்டத்தில் போட்டி உள்ள 58 இடங்களுக்கு வருகிற 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x