Published : 06 Dec 2018 05:35 PM
Last Updated : 06 Dec 2018 05:35 PM

விரைவாகக் குணமடைந்து வரும் பிரித்வி ஷா: முடிந்தால் பெர்த் டெஸ்டுக்கே திரும்ப வாய்ப்பு

சேவாக்-கம்பீருக்குப் பிறகு தொடக்க ஆட்டக்காரர்கள் இல்லாமல் தவித்து வரும் இந்திய அணிக்கு சேவாக் பாணியில் ஒரு தொடக்க வீரர் பிரித்வி ஷா மூலம் கிடைத்துள்ளார், அறிமுக டெஸ்ட் அதிரடி சதத்துக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் டெஸ்ட்டில் இன்று அவர் ஆடியிருக்க வேண்டியது, ஆனால் பயிற்சி ஆட்டத்தில் தேவையில்லாமல் ஒரு கேட்சைப் பிடிக்க பிரயத்தனம் செய்து இடது கால் திரும்பியது.

இந்நிலையில் அவர் அடிலெய்ட் டெஸ்ட்டில் ஆட முடியாமல் போனது இந்திய அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது, முரளி விஜய், கே.எல்.ராகுல் செய்த தவறுகளை திருத்திக் கொள்வதாகத் தெரியவில்லை, காரணம் அவர்கள் ஆட்ட உருவாக்கமே அப்படித்தான். பழைய உத்தியான 2 ஷார்ட் பிட்ச் பந்து பிறகு 4வது ஸ்டம்பில் ஒரு ஃபுல் லெந்த் பந்து அவ்வளவுதான் எட்ஜ் ஆகிவிடும் என்பதே முரளி விஜய்க்குப் போதும் என்று எல்லா பவுலர்களும் நினைக்கத் தொடங்கிய காலத்தில் மயங்க் அகர்வாலை விடுத்து இவருக்கு இன்னொரு வாய்ப்பு அவருக்கும் விரயம் இந்திய அணிக்கும் விரயம். 7 ஓவர்களில் கேப்டன் விராட் கோலி இறங்க வேண்டுமென்ற நிர்பந்தம் ஏற்பட்டால் எதிரணியினருக்கு அது அல்வா சாப்பிடுவது போன்றது, ஏனெனில் கோலிக்கு அந்த நிலையில் அடித்து ஆடுவதா நிலைத்து ஆடுவதா என்ற குழப்பம் ஏற்படும் இந்தக் குழப்பத்திலேயே ஆட்டமிழப்பார்.

இந்நிலையில் விராட் கோலி ஒரு அச்சுறுத்தலாக திகழ வேண்டுமெனில் தொடக்க ஆட்டக்காரர்கள் வலுவாக இருக்க வேண்டும், அதற்கு பிரித்வி ஷா தேவை.

அவரது காயம் குறித்து தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:

உண்மையில் இது துரதிர்ஷ்டமானது.  அவர் இந்த டெஸ்ட் போட்டியில் ஆடுவதை நாங்கள் அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்தோம். 18 வயது வீரர் படிமுறைகளைக் கடந்து உயர்மட்ட நிலைக்கு வந்த பிறகு முக்கிய போட்டியில் ஆட முடியாமல் போனது வருத்தமே. ஆனால் நல்ல செய்தி என்னவெனில் அவர் விரைவில் குணமடைந்து வருகிறார். ஏற்கெனவே நடக்கத் தொடங்கி விட்டார். இந்த வார இறுதியில் அவரை லேசாக ஓட்டத்துக்குத் தயார் படுத்துவோம்.  உண்மையில் இது நல்ல அறிகுறி.

மெல்போர்ன் டெஸ்ட் வரை போக வேண்டியிருக்காது என்று நினைக்கிறேன். அவரது வயது அவரை விரைவில் குணப்படுத்தி வருகிறது, எனவே அவர் மெல்போர்னுக்கு முன்பாகக் கூட குணமடைந்து விடுவார் என்றே எதிர்பார்க்கிறோம். பெர்த் டெஸ்ட் போட்டிக்கு (டிச.14) முன்பாக நிச்சயம் முடிவெடுப்போம்.

இவ்வ்வாறு கூறினார் ரவி சாஸ்திரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x