Published : 05 Dec 2018 04:10 PM
Last Updated : 05 Dec 2018 04:10 PM

பிரமாதமான புல்ஷாட்கள்.. ஸ்பின் பவுலிங்குக்கு எதிராக சிலபல ட்ரைவ்கள்: அடிலெய்ட் வலையில் விராட் கோலி அசத்தல்

நாளை அடிலெய்ட் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. ஆஷஸுக்குப் பிறகு வணிக ரீதியாகவும் கிரிக்கெட் ரீதியாகவும் பெரிய ஹிட் டெஸ்ட் தொடராக பார்டர்-கவாஸ்கர் டிராபி தன்னை உயர்த்திக் கொள்ள கங்குலி கேப்டன்சியிலிருந்து தற்போது விராட் கோலி என்ற நம்பர் 1 வீரர் வரை நட்சத்திர வீரர்கள் பங்களிப்பு செய்துள்ளனர்.

இந்தத் தொடரை கோலிக்கும் ஆஸ்திரேலியாவுக்குமான தொடர் என்றே விளம்பரப்படுத்துகின்றனர், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டார்க், கமின்ஸ், ஹேசில்வுட் முதல் முன்னாள் ஆஸி. கேப்டன்கள் இயன் சாப்பல் முதல் ரிக்கி பாண்டிங் வரை கோலியை வீழ்த்துவது எப்படி, ரன் மெஷினை எப்படிப் பிரிப்பது என்று தங்கள் தரப்பு ஆலோசனைகளை முன் வைத்துள்ளனர்.

ஸ்லெட்ஜிங்கில் கோலியைச் சீண்டுவது ஆஸ்திரேலிய அணிக்குத்தான் ஆபத்து என்று சிலரும், ஸ்லெட்ஜிங் இல்லாமல் ஆஸ்திரேலியா ஒரு துரும்பைக் கூட வெல்ல முடியாது என்று ஒருசிலரும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர், இந்நிலையில் இந்திய அணியை ‘பயந்தாங்கொள்ளிகள்’ என்று ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று வர்ணிக்க அதற்கு ஆஸ்திரேலிய ரசிகர்களே கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு, ஆஸ்திரேலிய ‘திமிர்’ பிடித்த ஊடகத்தின் மனநிலை ஆஸ்திரேலியர்களின் மனநிலையாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று ரசிகர்கள் ட்விட்டரில் மன்னிப்புக் கேட்டதும் நடந்தேறியுள்ளது.

இத்தகைய உஷ்ணம் ஏற்றப்பட்ட நிலையில் விராட் கோலி அடிலெய்ட் வலைப்பயிற்சியில் பிரமாதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவர் வலைப்பயிற்சி செய்த வீடியோ கிரிக்கெட் இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ளது. வலைப்பயிற்சிக்காக பேட்ஸ்மேன்களுக்கு த்ரோ டவுன் முறையில் பேட்டிங் பயிற்சி அளிக்கப்பட்டது,  கோலியே சிலபல த்ரோக்களை கே.எல்.ராகுல் பேட் செய்யும் போது வீசினார். திடீர் பவுன்சர்கள் வீசப்பட்டு ராகுலுக்கு சோதனை வைக்கப்பட்டது. பிறகு கோலி பேட் செய்யும் போது மொகமது ஷமி சிலபல பவுன்சர்களை வீசி சோதித்தார். பும்ரா வீசிய சில ஷார்ட் பிட்ச் பந்துகளை அவர் பாணியில் புல்ஷாட்களை ஆடினார் விராட் கோலி.

ஆனால் பும்ரா வீசிய ஒரு பந்து கொஞ்சம் தாழ்வாக வர கோலி சற்றே அதிர்ச்சியடைந்தார், ஆனால் பும்ரா, “பந்து பழைய பந்து என்பதால் பவுன்ஸ் இல்லை” என்று கோலிக்கு விளக்கினார்.  பிறகு இஷாந்த் சர்மாவின் குட் லெந்த் பந்துகளை அனாயசமாக தடுத்தும் ட்ரைவும் ஆடினார். பிறகு ஸ்பின் சோதனை ஸ்பின்னர்களை கால்களை பயன்படுத்தி முன்னால் ஏறிச்சென்று எதிர்கொண்டார்.

விராட் கோலியின் வலைப்பயிற்சியை அடிலெய்ட் ஸ்டேடியத்தில் குறைவான ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ரசித்துப் பார்த்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x