Published : 12 Dec 2018 11:34 AM
Last Updated : 12 Dec 2018 11:34 AM

தோனி எங்கள் ஹீரோ; அவர் இருந்தால் நம்பிக்கையாக உணர்வேன்: ரிஷப் பந்த் பெருமிதம்

தோனி எங்கள் நாட்டு ஹீரோ, அவர் எங்கள் அருகே இருந்தால், மிகுந்த நம்பிக்கையாக உணர்வேன் என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் பெருமிதத்தோடு தெரிவித்தார்.

அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 31 ரன்களில் வெற்றி பெற்றது.

இந்த டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் 11 கேட்சுகளைப் பிடித்து உலக சாதனையைச் சமன் செய்தார். இதற்கு முன் ஒரே டெஸ்ட் போட்டியில் 11 கேட்சுகளை இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜேக் ரஷல், தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் ஏபி டீவில்லியர்ஸ் மட்டுமே செய்திருந்த நிலையில், அதை ரிஷப் பந்த் சமன் செய்துள்ளார்.

இது குறித்து ரிஷப் பந்த் ஆஸ்திரேலியாவில் உள்ள இணையதளம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

''எனக்கு விக்கெட் கீப்பிங்கில் பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொடுத்தவர் எம்.எஸ்.தோனிதான். பல்வேறு விக்கெட் கீப்பர்கள் அணியில் உருவாகவும் தோனிதான் காரணமாக இருந்தார். தோனி எங்கள் நாட்டின் ஹீரோ.

தோனியிடம் இருந்து கிரிக்கெட் வீரராக, தனி மனிதராக ஏராளமான விஷயங்களை நான் கற்றுக்கொண்டிருக்கிறேன். எப்போதெல்லாம் தோனி எங்களுடன் இருக்கிறாரோ அப்போது மிகவும் நம்பிக்கை உடையவனாக நான் உணர்வேன். எனக்கு எந்தவிதமான பிரச்சினைகள் இருந்தாலும், அதை தோனியிடம் கூறி, அதற்கு சரியான தீர்வும் காண்பேன்.

ஒரு விக்கெட் கீப்பராகவும், தனி மனிதராகவும் தோனி எனக்கு அதிகமான விஷயங்களைக் கற்றுக்கொடுத்து இருக்கிறார். கடினமான, நெருக்கடியான சூழல்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பொறுமையை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்பதை எனக்குக் கற்றுக்கொடுத்துள்ளார். நெருக்கடியான நேரத்தில் அமைதியாக இருந்து, 100 சதவீதம் முயற்சிக்க வேண்டும் என எனக்கு தோனி அறிவுறுத்தியுள்ளார்.

அடிலெய்ட் டெஸ்டில் இப்படி ஒரு சாதனையை நான் நிகழ்த்துவேன் என்று நினைக்கவில்லை. ஆனால், சில நல்ல கேட்சுகளைப் பிடித்திருக்கிறேன்''.

இவ்வாறு ரிஷப் பந்த் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x