

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி 20 கிரிக்கெட் தொடரில் சாந்தோம், பிஎஸ்பிபி அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறின.
முத்தூட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆதரவுடன் மாநிலம் முழுவதும் இருந்து 64 பள்ளிகள் பங்கேற்றுள்ள ஜூனியர் சூப்பர் கிங்ஸ்
(ஜேஎஸ்கே) கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
இதில் சென்னையில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் கே.கே.நகர் பிஎஸ்பிபி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் கோபாலபுரம் டிஏவி அணியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.முதலில் பேட் செய்த பிஎஸ்பிபி அணி 19.4 ஓவர்களில் 89 ரன்களுக்குஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஏ.பி.தியாஷ் 23 ரன்கள் சேர்த்தார். டிஏவி அணி தரப்பில் ஏ.ரோனக் பக்மார், எஸ்.ஜி.ஆதித்யா, ஜீத் எஸ்.ஜெயின் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
தொடர்ந்து விளையாடிய டிஏவிஅணி 17.2 ஓவர்களில் 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஏ.ஆதர்ஷ் பக்மர் 21 ரன்கள் எடுத்தார். பிஎஸ்பிபி அணி தரப்பில் வி.சத்யநாராயணன் 3 விக்கெட்களையும் டி.வி.சைதன்யா, பி.எஸ்,ஹரிஹரன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக சைதன்யா தேர்வானார்.
மற்றொரு ஆட்டத்தில் சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஏ.ஐ. மேல்நிலைப்பள்ளி 22 ரன்கள் வித்தியாசத்தில் லேடி ஆண்டாள் பள்ளியை வீழ்த்தி கால் இறுதியில் கால்பதித்தது. முதலில் பேட் செய்த செயின்ட் பீட்ஸ் அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 141 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விக்னேஷ் எஸ்.ஐயர் 39, மிதுல் ராஜ் 29 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய லேடிஆண்டாள் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 119 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. அதிகபட்சமாக கரன் முனோத் 24 ரன்கள் சேர்த்தார். செயின்ட் பீட்ஸ் அணி தரப்பில் விக்னேஷ் எஸ்.ஐயர் 3 விக்கெட்கள் கைப்பற்றினார்.
சாந்தோம் மேல்நிலைப் பள்ளி, செட்டிநாடு வித்யாஷ்ரம் அணிகள் இடையிலான ஆட்டத்தில் சாந்தோம் மேல்நிலைப் பள்ளி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த சாந்தோம் மேல்நிலைப் பள்ளி 6 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜே.அஜெய் சேத்தன் 72, ஏ.டி.ஆதி சங்கர் 39 ரன்கள் எடுத்தனர்.
செட்டிநாடு வித்யாஷ்ரம் தரப்பில் நிஷாந்த், தக் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 177 ரன்கள் இலக்குடன் விளையாடிய செட்டிநாடு வித்
யாஷ்ரம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 94 ரன்கள் மட்டுமே எடுத்தது. சாந்தோம் மேல்நிலைப் பள்ளி தரப்பில் சஞ்ஜீவ் குமார் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
ஏவிஎம் ராஜேஷ்வரி அணி, புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதிய ஆட்டத்தில் ஏவிஎம் ராஜேஷ்வரி அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ஏவிஎம் ராஜேஷ்வரி 20 ஓவர்களில் 119ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. புதூர் அரசு பள்ளி தரப்பில் ஆர்.காளிஸ்வரன், ஆர்.அரவிந்தன் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் கைப்பற்றினர்.
தொடர்ந்து விளையாடிய புதூர் அரசு பள்ளி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 67 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஏவிஎம் ராஜேஷ்வரி அணி தரப்பில் ஆர்.யஷ்வந்த் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். இன்று நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் செயின்ட் பீட்ஸ் - கே.கே.நகர் பிஎஸ்பிபி அணிகளும், டான்போஸ்கோ - பிஎஸ்பிபி மிலெனியம் அணிகளும், நெல்லை நாடார் - வேலம்மாள் சர்வதேச பள்ளி அணிகளும், சாந்தோம் மேல்நிலை பள்ளி - ஏவிஎம் ராஜேஷ்வரி அணிகளும் மோதுகின்றன.