Published : 31 Dec 2018 09:52 AM
Last Updated : 31 Dec 2018 09:52 AM

விராட் கோலி சாதனை: தொடர்ந்து 3-வது ஆண்டாக சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள் குவிப்பு

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

உள்நாட்டுப் போட்டிகளில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் நடந்த போட்டிகளிலும் கேப்டன் விராட் கோலி இந்த ஆண்டு சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடர், தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கோலி சதம் அடித்து அசத்தியுள்ளார்.

அந்த வகையில் 2018-ம் ஆண்டில் டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய 3 வகையான போட்டிகளிலும் விராட் கோலி 2 ஆயிரத்து 653 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். விராட் கோலியின் சாதனையை இதுவரை எந்த நாட்டு வீரரும் இன்னும் முறியடிக்கவில்லை. இந்த ஆண்டு விராட் கோலியின் பேட்டிங் சராசரி 69.81 ஆகவும், அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 160 ரன்கள் சேர்த்துள்ளார். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த சாதனையை விராட் கோலி படைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016-ம் ஆண்டில் விராட் கோலி 2,595 ரன்களும், 2017-ம் ஆண்டில் 2,818 ரன்களும் விராட் கோலி குவித்து அந்தச் சாதனையை தக்கவைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனையைத் தவிர்த்து கங்குலியின் சாதனையையும் விராட் கோலி சமன் செய்துள்ளார். வெளிநாடுகளில் அதிகமான வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த கேப்டன்களில் கங்குலி 11 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருந்தார். அந்த சாதனையை கோலி மெல்போர்ன் வெற்றி மூலம் சமன் செய்துள்ளார்.

24 டெஸ்ட் போட்டிகளில் கோலி தலைமையில் வெளிநாடுகளில் விளையாடியுள்ள இந்தியா அணி 11 வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 18 டெஸ்ட் போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் டிராவும் செய்துள்ளது. ஆனால், விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் டாஸ் வென்ற பின் ஒருபோட்டியில் கூட தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x