

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து டெல்லி சாஹேத் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனமான ருத்ரா பில்ட்வெல் ரியாலிட்டி நிறுவனத்தின் வர்த்தக தூதுவராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், இந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநர்களான முகேஷ் குராணா, கவுதம் மேத்தா ஆகியோர் முதலீட்டாளர்களை ஏமாற்றிவிட்டதாகவும், குறித்த நேரத்தில்வீடுகளை கட்டித்தரவில்லை என்றும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக முதலீட்டாளர்கள் போலீஸில் புகார் செய்தனர், டெல்லி சாஹேத் மாநகர குற்றவியல் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தனர். இதில் ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர் முகேஷ் குராணா, மேத்தா ஆகியோர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து, விளம்பரங்களில் நடித்து தூதுவராக செயல்பட்ட கம்பீருக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கம்பீர் தரப்பில் வழக்கறிஞர்கள் வாதாடி கம்பீர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தூதுவராக மட்டுமே இருந்தார், அவருக்கும் நிறுவனத்துக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்தனர். இந்த வழக்கின் விசாரணை மாஜிஸ்திரேட் மணீஷ் குராணா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கவுதம் கம்பீர் நேரில் ஏன் நேரில் ஆஜராகமல் தொடர்ந்து புறக்கணிக்கிறார் என்று நீதிபதி குராணா கேள்வி எழுப்பினார். அதற்கு வழக்கறிஞர்கள் தரப்பில் பதில் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, கவுதம் கம்பீருக்கு எதிராக ரூ.10 ஆயிரம் மதிப்பில் ஜாமீனில் வெளிவரக்கூடிய கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி மணிஷ் குராணா உத்தரவிட்டார். அடுத்த முறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்
இந்திய அணியில் 15 ஆண்டுகளாகவும், 20 ஆண்டுகளுக்கு மேலாகவும் கிரிக்கெட் விளையாடிய கம்பீர் இம்மாத தொடக்கத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் கடந்த 16 ஆண்டுகளாக இடம் பெற்று விளையாடிய கவுதம் கம்பீர், இந்திய அணிக்காக 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,154 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 9 சதங்கள், 22 அரை சதங்கள் அடங்கும்.147 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் 5,238 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 11 சதங்களும், 34 அரை சதங்களும் அடங்கும். மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரராகக் கம்பீர் வலம் வந்து, எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். 37 டி20 போட்டிகளில் விளையாடி 932 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 7 அரை சதங்கள் அடங்கும். அதன்பின், கடைசியாக ரஞ்சிப்போட்டியில் மட்டும் விளையாடியதோடு விடைபெற்றார்.