

கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறும் இலங்கை-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து இடது கை வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் 30 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இலங்கை அணி 104 ரன்களுக்குச் சுருண்டது. நியூஸிலாந்து தன் முதல் இன்னிங்சில் சுரங்க லக்மலின் அபார பந்து வீச்சுக்கு 178 ரன்களுக்குச் சுருண்டது.
முதல் நாள் ஆட்ட முடிவில் 88/4 என்று இருந்த இலங்கை இன்று ட்ரெண்ட் போல்ட்டின் ‘தண்டர்போல்ட்’ பந்து வீச்சில் 104 ரன்களுக்கு சுருண்டது. நியூஸிலாந்து தன் 2வது இன்னிங்சில் சற்று முன் வரை விக்கெட் இழப்பின்றி 118 ரன்கள் எடுத்து மொத்தம் 192 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையில் உள்ளது.
இன்னிங்சின் 37வது ஓவரில் சில்வா 21 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட்டின் பந்தை தொட்டார் கெட்டார், சவுதிக்கு ஸ்லிப்பில் சவுகரியமான கேட்ச் 94/5. அதே ஒவரில் டிக்வெல்லா மிட்விக்கெட்டில் தூக்கி அடித்து பவுண்டரி அடித்தார்.
மீண்டும் 39வது ஓவரில் போல்ட் பந்து வீசிய போது அருமையான பந்து ஒன்று டிக்வெல்லாவின் பேட்டிங் நிலையையே மாற்றியது லேட் ஸ்விங் ஆக எட்ஜ் ஆனது. சவுதி முழு ஸ்ட்ரெட்ச் டைவ் அடித்து இரண்டாவது ஸ்லிப்பின் முன் விழுந்து பிடித்தார், மிக அருமையான கேட்ச் 100/6. இதே ஓவரின் 5 வது பந்தில் திலுருவன் பெரேரா மிடில் ஸ்டம்புக்கு உள்ளே வந்த பந்தை வெளியே செல்லும் என நினைத்து ஆடாமல் விட்டு நேராக கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆகி வெளியேறினார் 100/7. அடுத்த பந்திலேயே ஃபுல், வேகப்பந்தில் லக்மல் ஷூவில் வாங்கி எல்.பி.ஆனார். 100/8. ஹாட்ரிக் வாய்ப்பில் இருந்தார் போல்ட், ஆனால் சமீரா ஹாட்ரிக் பந்தை தடுத்தாடினார்.
மீண்டும் 41வது ஓவரில் வந்தார் போல்ட், இன்ஸ்விங்கரில் சமீராவை எல்.பி.ஆக்கினார், பிறகு குமாராவையும் இதே ஓவரில் எல்.பி. ஆக்க போல்ட் 15 பந்துகளில் 6 விக்கெட்டுகள் கொடுத்த ரன்கள் வெறும் 4 ரன்கள். 88/4 என்பதிலிருந்து 104 ரன்களுக்குச் சுருண்டது இலங்கை.
இந்த விக்கெட்டுகளையெல்லாம் ஒரு முனையில் 33 நாட் அவுட் என்று வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது ஆஞ்சேலோ மேத்யூஸினால். இவர்தான் அதிகபட்ச ஸ்கோர் கூட. போல்ட் 30 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்த சவுதி 3 விக்கெட்டுகளையும் கொலின் டி கிராண்ட்ஹோம் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.