விராட் கோலியைக் கொண்டு போய் பீடத்தில் அமரவைத்துள்ளனர், அவர் நடத்தையோ மிகவும் ‘சீப்’ ஆக இருக்கிறது: மிட்செல் ஜான்சன் காட்டம்

விராட் கோலியைக் கொண்டு போய் பீடத்தில் அமரவைத்துள்ளனர், அவர் நடத்தையோ மிகவும் ‘சீப்’ ஆக இருக்கிறது: மிட்செல் ஜான்சன் காட்டம்
Updated on
1 min read

ஸ்லெட்ஜிங் செய்ய மாட்டோம் என்று கூறிய ஆஸ்திரேலியா கடைசியில் வெற்றி பெற ஸ்லெட்ஜிங் தான் சிறந்தது என்று முடிவு கட்டி விராட் கோலியைச் சீண்டி அவரையும் டிம் பெய்னையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்தனர்.

கவாஸ்கர் கூறுவது போல் இதைக் கண்டு கொள்ளாது விட்டு விட்டு ஆட்டத்தில் கவனம் செலுத்தியிருந்தால் 2வது இன்னிங்சில் கோலி மலிவாக அவுட் ஆகியிருக்க நேரிட்டிருக்காது என்றார்.

டிம் பெய்னும், விராட் கோலியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர், அதன் பிறகு சரியாகி விட்டது என்றும் இதெல்லாம் சகஜம் என்றும் அந்தச் சம்பவத்தை குகைக்குள் தள்ளினர்.

இந்நிலையில் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸுக்கு பத்தி எழுதிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் அதில்  “டிம் பெய்னுடன் கடைசியில் ஆட்டம் முடிந்தவுடன் கைகொடுக்கும் போது கண்ணுக்குக் கண் பார்த்து, கைகுலுக்கி “அருமையான போட்டி” என்று கூற வேண்டும், கோலி கைகுலுக்கினார், ஆனால் அவர் கண்களைப் பார்க்கவில்லை, இது மரியாதை கெட்டத்தனம் என்று கருதுகிறேன்.

இந்தியாவின் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் வாய்மொழியிலும் பந்து வீச்சிலும் ஆஸி. பேட்ஸ்மென்களை எதிர்த்து பெரிய சவாலில் இறங்கினர், ரசிகர்கள் மகிழ்ந்தார்கள், இவற்றை நான் மகிழ்ச்சியுடன் ரசித்தேன். இவையெல்லாம் கிரிக்கெட்டுக்கு, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லது.

விராட் கோலி இதுபோன்ற நடத்தையில் கண்டுகொள்ளப்படுவதில்லை, அவரை பீடத்தில் ஏற்றி வைக்கின்றனர். ஆனால் இந்த டெஸ்ட் அவரை மிகவும் மலிவான ஒரு மனிதராகவே காட்டியது.

தொடருக்கு முன்பு தான் மிகவும் மாறிய ஒரு மனிதர் என்றார், ஆனால் அவரிடம் எதுவும் மாறியதாகத் தெரியவில்லை என்பது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

முதல் இன்னிங்சில் சதம் அடித்தார், ஆனால் மக்கள் அவர் அவுட் ஆகிச் சென்ற போது கரகோஷம் எழுப்பி வழியனுப்பினர், ஆனால் அவர் ரசிகர்களையும் மதிக்கவில்லை, அன்று மாலை செய்தியாளர்கள் ஹேண்ட்ஸ்கம்ப் கேட்ச் பற்றி அவரிடம் கேட்கவிருந்தனர், ஆனால் பும்ராவை அனுப்பிவைத்து ஏமாற்றமளித்தார்.

எனக்கும் அவருக்கும் 2014 மெல்போர்ன் மைதானத்தில் மோதல் ஏற்பட்டது. நான் பந்தை பீல்ட் செய்து த்ரோ செய்தேன், நான் ஸ்டம்பைத்தான் குறிவைத்தேன், ஆனால் அது அவர் மேல் பட்டது, நான் அதற்காக மன்னிப்பு கேட்டேன்,  ஆனால் அவரோ, ‘உங்களை நான் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று பேசினார்.

டிம் பெய்ன் பிரமாதமாக கோலியை எதிர்கொண்டார், அவர் ஒரு அணியின் கேப்டன், அவர் ஏன் அடிபணிய வேண்டும்? அவர் ஒரு அணியின் கேப்டனாக நடந்து கொண்டார். டிம் பெய்ன் சரியாகவே நடந்து கொண்டார்” என்று எழுதியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in