Published : 29 Dec 2018 01:54 PM
Last Updated : 29 Dec 2018 01:54 PM

வீரர்களின் தனிப்பட்ட முன்னுரிமையை விமர்சிக்காதீர்கள்: கம்பீர், சுனில் கவாஸ்கருக்கு தோனி பதிலடி

ரஞ்சி உள்ளிட்ட உள்நாட்டுப் போட்டிகளைத் துறக்கும் வீரர்களின் தனிப்பட்ட முன்னுரிமையை விமர்சிக்க வேண்டாம் என்று இந்திய அணியின் ஒருநாள், டி20 விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் தோனி  கவாஸ்கர், கம்பீர் ஆகியோருக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

“கடைசியாக அக்டோபரில் ஆடிய தோனி அடுத்து ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடுவார், அவருக்கு மேட்ச் பிராக்டீஸ் எதுவும் இல்லை. இது மிகப்பெரிய இடைவெளி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்களில் அவர் சரியாக ஆடவில்லை எனில் உலகக்கோப்பையில் அவரது இடம் கேள்விக்குறியாகும். வயதாக வயதாக ர்ஃப்ளெக்ஸ் போய்விடும் அதை தொடர்ந்து ஆடுவதன் மூலம்தான் பெற முடியும்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் எந்த ஒரு வடிவத்தில் ஆடினாலும் அது நீண்ட இன்னிங்ஸை ஆட வாய்ப்பளிக்கும். அது நல்ல பயிற்சியாக அமையும்” என்று தோனி உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடாமல் ஜாலியாக நேரத்தைச் செலவிட்டு பிறகு நேரடியாக அணியில் இடம்பெறுவதன் அடிப்படையைக் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் அவர் வீரர்களை விட அணித்தேர்வுக்குழுவையும் பிசிசிஐ-யையும் கேள்வி கேட்டார், வீரர்களை விடுங்கள், பிசிசிஐ ஏன் அவர்களை உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆட வலியுறுத்துவதில்லை என்றுதான் அவர் கேட்டார்.

கவுதம் கம்பீரும் டெல்லி அணிக்காக விளையாடாத பெரிய பெயர்களைக் கேள்விக்குட்படுத்தினார். டெல்லி கிரிக்கெட்டிலிருந்துதான் நீங்கள் சென்றிருக்கிறீர்கள், உங்கள் கனவை இங்கிருந்துதான் பூர்த்தி செய்ய முடிந்துள்ளது, ஆனால் அங்கு சென்றவுடன் டெல்லியை மறப்பதா? என்றும் அதனால்தான் உள்நாட்டு கிரிக்கெட்டை ஆடாத பெரிய வீரர்களை அவர்கள் இஷ்டத்துக்கு ரஞ்சியில் எடுக்கக் கூடாது என்று நான் கூறிவருகிறேன், ஆனால் தேர்வுக்குழுவுக்கு முதுகெலும்பே கிடையாது என்று கடுமையாக உள்நாட்டு கிரிக்கெட் ஆடாதவர்களைச் சாடினார்.

இந்நிலையில் நேற்று பிசிசிஐ முன்னாள் தலைவர் என்.சீனிவாசன் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.எஸ்.தோனி, இது குறித்து கூறியதாவது:

 

“வீரர்களைப் பாதுகாப்பது அவசியம்.  உள்நாட்டு கிரிக்கெட்டை தனிப்பட்ட வீரர்களுக்கு சவால் இல்லாததாக கொஞ்சம் மாற்றவேண்டும், அதாவது போட்டி அட்டவணை விவகாரத்தில்... டி20 கிரிக்கெட் பற்றி அதிகம் விமர்சிக்காமல் இருப்பது முக்கியம் அதே போல் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடுவதா வேண்டாமா என்ற தெரிவு தனிப்பட்ட வீரர்களுடையது, இதையும் விமர்சிக்க வேண்டாம் என்பது முக்கியமாகும்” என்றார் தோனி.

 

இவ்வாறாக கவாஸ்கர், கம்பீர் ஆகியோருடைய கருத்துக்கு தோனி பதிலடி கொடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x