16 ஆண்டுகளுக்குப் பின் திராவிட் சாதனையை முறியடித்த விராட் கோலி

16 ஆண்டுகளுக்குப் பின் திராவிட் சாதனையை முறியடித்த விராட் கோலி
Updated on
1 min read

மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 16 ஆண்டுகளுக்குப் பின் புதிய சாதனை படைத்துள்ளார்.

மெல்போர்னில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட் செய் தீர்மானித்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்திருந்தது. புஜாரா 68, கோலி 47 ரன்களுடன் இன்றைய 2-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

சிறப்பாக பேட் செய்த புஜாரா சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 17-வது சதத்தை நிறைவு செய்தார். அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்குச் சென்று ஒரே தொடரில் 2-வது முறையாக 2 சதங்களை புஜாரா விளாசினார். மேலும் விவிஎஸ் லட்சுமணனின் 17-வது சதத்தை நிறைவு செய்த புஜாரா, கங்குலியின் 16 டெஸ்ட் சதங்களை சமன் செய்தார். துணையாக பேட் செய்த கேப்டன் விராட் கோலி அரை சதம் அடித்து 82 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 86 ரன்கள் சேர்த்ததன் மூலம் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் ராகுல் திராவிட்டின் சாதனையை முறியடித்துள்ளார். வெளிநாடுகளில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஒரு காலண்டர் ஆண்டில் அதிகபட்சமாக இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் திராவிட் கடந்த 2002-ம் ஆண்டில் 1,137 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இதுவரை இருந்தது.

ஆனால், அவரின் சாதனையை முறியடித்த கோலி 1,138 ரன்கள் சேர்த்து ஒரே காலண்டர் ஆண்டில் வெளிநாடுகளில் அதிக ரன் சேர்த்த இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

இவர்களுக்கு அடுத்த இடத்தில் 1983-ம் ஆண்டு மொகிந்திர் அமர்நாத் 19 போட்டிகளில் 1,065 ரன்களை சேர்த்து 3-ம் இடத்தில் உள்ளார். சுனில் கவாஸ்கர் கடந்த 1971-ம் ஆண்டில் 918 ரன்கள் சேர்த்து 4-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in