

மிட்செல் மார்ஷ் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல் படுமோசமாக ஆடி அவுட் ஆனதைப் பார்க்கும் போது ஓய்வறைக்குச் சென்று அவரது உடைகளைக் ஆத்திரத்தில் கிழித்திருப்பேன் என்று முன்னாள் ஆஸி.வீரர் சைமன் கேடிச் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
மிட்செல் மார்ஷ் இன்று 10 ரன்களில் ரவிந்திர ஜடேஜா பந்தை கவரில் கேட்ச் கொடுத்து தேநீர் இடைவேளைக்கு சற்று முன் வெளியேறினார்.
மிட்செல் மார்ஷ் அவுட்டைப் பார்த்த போது வாயில் வார்த்தைகளே இல்லாமல் போய் விட்டது, கடும் ஆத்திரம் வந்தது என்று சைமன் கேடிச் பொறுமை இழந்தார்.
சென் ரேடியோவில் அவர் மேலும் கூறும்போது, “மிட்செல் மார்ஷ் அவுட்டை பார்த்த போது என்னிடம் வார்த்தைகள் இல்லை. அவருக்கு மூளை மழுங்கி விட்டது என்று நினைக்கிறேன், 3 ரன்களில் இருந்த போது ஜடேஜாவை தலைக்கு மேல் தூக்கி அடிக்க முயன்றார் எப்படியோ தப்பினார். ஆனால் 10 ரன்னில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
சிட்னி டெஸ்ட்டுக்கு மிட்செல் மார்ஷ், ஏரோன் பிஞ்ச் இருவரும் அணியில் இருக்கக் கூடாது.
ஜஸ்டின் லாங்கர் இவர்கள் ஆட்டத்தைப் பார்த்து முடியைப் பிய்த்து கொண்டிருப்பார். முடியைப் பிய்த்துப் பிய்த்து சிட்னி டெஸ்ட்டுக்குள் அவருக்கு வழுக்கையே விழுந்து விடப் போகிறது.
என்று நகைச்சுவையும் ஆவேசமும் கலந்து பேசினார் சைமன் கேடிச்.