

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவின் முதல் ஓவரின் 3வது பந்திலேயே குட்லெந்த் இன்ஸ்விங்கரை பெரிய கவர் டிரைவ் பால் என நினைத்து ஆடி ஆஸ்திரேலிய தொடக்க வீரர் பிஞ்ச் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இது குறித்து பாண்டிங் கூறியதாவது:
பிரச்சினை எங்கு தொடங்கியது என்றால் பாகிஸ்தானுக்கு எதிராக யு.ஏ.இ.யில் பிஞ்ச்சை தொடக்க வீரராகக் களமிறக்கியதிலிருந்தே. அங்கு தொடக்க வீரராக உலகிலேயே சுலபமாக ஆடக்கூடிய இடம். அங்கு அவர் சுமாராக ஸ்கோர் செய்தார், இதனால் அவர் இங்கும் தொடக்க வீரராக இறங்க வேண்டும் என்பது நியதியாகிவிட்டது.
ஸ்விங் ஆகும் சிகப்புப் பந்துக்கு எதிராக அவர் பலவீனமானவர் என்று அனைவருக்கும் தெரியும். ஆஷஸ் தொடர் ரொம்பத் தொலைவில் இல்லை. இங்கிலாந்தில் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகும். அங்கு பிஞ்ச் என்ன செய்வார், ஆஸி.யின் நீண்ட காலத் திட்டம் என்ன?
இன்று அடிலெய்டில் அவர் ஆடிய ஷாட் நல்ல டெஸ்ட் தொடக்க வீரருக்கு அழகல்ல. இந்தப் பிட்சில் புதிய பந்துதான் பெரிய சவால். ஆனால் பிஞ்ச் ஒரு பெரிய கவர் ட்ரைவ் ஆட 3வது பந்திலேயே முயற்சி செய்தார்.
சில வேளைகளில் இப்படி நடப்பதுண்டு, ஆனால் ஏரோன் பிஞ்ச் இன்னும் நிறைய பயிற்சி எடுக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு சாடினார் ரிக்கி பாண்டிங்