Published : 30 Dec 2018 09:22 AM
Last Updated : 30 Dec 2018 09:22 AM

சென்னை சிட்டி அணிக்கு 6-வது வெற்றி

ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடரில் சென்னை சிட்டி அணி 6-வது வெற்றியை பதிவு செய்தது.

கோவை நேரு விளையாட் டரங்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சிட்டி அணி, மேகாலயாவின் ஷில்லாங் லஜோங் அணியை எதிர்த்து விளை யாடியது. ஆட்டம் தொடங்கிய 12-வது நிமிடத்திலேயே சென்னை சிட்டி அணி முதல் கோலை அடித்தது. சான்ட்ரோ ரோட்ரிக்ஸ் உதவியுடன் இந்த கோலை நெஸ்டர் ஜீசஸ் கோர்டிலோ அடித்தார். இதனால் சென்னை சிட்டி அணி 1-0 என முன்னிலை பெற்றது.

38-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து சான்ட்ரோ ரோட்ரிக்ஸ் அடித்த பந்தை பாக்ஸின் மையப் பகுதியில் இருந்து ராபர்டோ எஸ்லாவா தலையால் முட்டி கோல் அடித்து அசத்தினார். இதனால் சென்னை சிட்டி அணி முதல் பாதியில் 2-0 என முன்னிலையை பெற்றது. 2-வது பாதி ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் சென்னை சிட்டி அணி 3-வது கோலை அடித்தது. இந்த கோலை வான்ஸ்பால் உதவியுடன் பெட்ரோ மான்ஸி அடித்தார்.

53-வது நிமிடத்தில் ஷில்லாங் லஜோங் அணி பதிலடி கொடுத்தது. பிரீகிக் வாய்ப்பில் அந்த அணியின் வீரர் சாமுவேல் லால்முவான்புவா பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து அடித்த பந்து கோல் வலையை துளைத்தது. 70-வது நிமிடத்தில் வான்ஸ்பால் உதவியுடன் நெஸ்டர் ஜீசஸ் கோர்டிலோ கோல் அடிக்க சென்னை சிட்டி அணி 4-1 என்ற முன்னிலையை அடைந்தது.

அடுத்த 8-வது நிமிடத்தில் பெட்ரோ மான்ஸி அசத்தலாக கோல் அடிக்க சென்னை அணியின் முன்னிலை 5-1 என அதிகரித்தது. 80-வது நிமிடத்தில் சென்னை சிட்டி அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. இதை பெட்ரோ மான்ஸி கோலாக மாற்ற முடிவில் சென்னை சிட்டி அணி 6-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

சென்னை சிட்டி அணிக்கு இது 6-வது வெற்றியாக அமைந்தது. 10 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை அணி 3 டிரா, ஒரு தோல்வியுடன் 21 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x