Published : 06 Dec 2018 08:38 am

Updated : 06 Dec 2018 08:38 am

 

Published : 06 Dec 2018 08:38 AM
Last Updated : 06 Dec 2018 08:38 AM

கவாஜாவின் திகைப்பூட்டும் கேட்சில் கோலி காலி ; இந்திய அணியின் வழக்கமான சொதப்பல் தொடக்கம்

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி தன் அணி டாப் ஆர்டர் மீது நம்பிக்கை வைத்து முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆனால் அவர் உட்பட டாப் ஆர்டர் தளர்வான ஷாட்களினால் வெளியேற உணவு இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் என்று தடுமாறுகிறது.

வெளியில் செய்து மைதானத்தில் கொண்டு வந்து பதித்த பிட்ச் பற்றி பிரெண்டன் ஜூலியன் தன் பிட்ச் ரிப்போர்ட்டில், “மிகப்பெரிய பேட்டிங் பிட்ச்” என்றார். தொடக்கத்தில் கொஞ்சம் பந்து எழும்பி சற்றே ஸ்விங் ஆகும். அதன் பிறகு “நம்ப முடியாத பேட்டிங்” செஷன்களாக இருக்கும் ஆகவே டாஸ் வென்று பேட் செய்ய வேண்டிய பிட்ச் என்றார், அதனால்தான் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார், ஆனால் கடைசியில் 7 ஓவர்களுக்குள் 2 விக்கெட் முதல் ஒருமணி நேரத்துக்குள் 3 விக்கெட், கடைசியில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரஹானேயின் தேவையில்லாத ஷாட் தேர்வு அவுட்.


தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்தில் செய்த தவறுகளைத் திருத்திக் கொண்டோம் என்றார்கள், ஆனால் விராட் கோலி உட்பட ஒருவரும் திருத்திக் கொள்ளவில்லை.

உணவு இடைவேளையின் போது புஜாரா 11 ரன்களுடனும், ரோஹித் சர்மா, கமின்ஸ் ஷார்ட் பிட்ச் பந்தை மிகப்பெரிய புல் ஷாட்டில் அடித்த ஸ்கொயர் லெக் சிக்சருடன் 15 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். இவர்கள் இருவர் கையிலும் அனுபவமற்ற ரிஷப் பந்த் கையிலும்தான் உள்ளது இந்திய அணி 200 ரன்களை எடுப்பது.

ஹேசில்வுட், கமின்ஸ் தொடங்கினர், கே.எல்.ராகுல் பதற்றமாக ஆடினார், 2வது ஓவரின் கடைசி பந்து கொஞ்சம் லேட் ஸ்விங் ஆக வெளியே சென்ற பந்துக்கும் அவரது காலுக்கும் மட்டை வந்த விதத்துக்கும் சம்பந்தமேயில்லாமல் ட்ரைவ் ஆட எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் பிஞ்ச்சிடம் கேட்ச் ஆனது. 2 ரன்களில் வெளியேறினார் ராகுல்.

முரளி விஜய்க்கு சிலபல நல்ல பந்துகளை ஹேசில்வுட்டும், மிட்செல் ஸ்டார்க்கும் வீசினர், சோதிக்கும் பந்து வீச்சு. முதல் பவுண்டரியை விஜய் ஸ்டார்க்கின் வைடு பந்தை விரட்டி பவுண்டரிக்கு அனுப்பினார் அதுவே தேவையில்லாத ஷாட்தான் அதிர்ஷ்டகரமாக இடைவெளியில் காற்றில் சென்றது.

அதன் பிறகு ஸ்டார்க் , விஜய்யை செட்-அப் செய்தார். அதாவது ஷார்ட் பிட்ச் பவுலிங்கை வீசி அவரை பின்னால் போகச் செய்தார், பிறகு ஒரு பந்தை 4வது ஸ்டம்பில் வீசி ஸ்விங் செய்ய தொட்டார் கெட்டார் விஜய். எட்ஜ் ஆகி பெய்ன் கேட்சை எடுத்தார்.

கோலி இறங்கினார். 13 பந்துகளில் 3 ரன்கள் எடுத்த நிலையில் கமின்ஸைக் கொண்டு வந்தார் பெய்ன், இது ஒர்க் அவுட் ஆனது, விராட் கோலி ஃபுல், வெளியே சென்ற பந்தை ட்ரைவ் ஆடும் சபலத்தை விட முடியாமல் ஆடினார். பந்து எட்ஜ் ஆகி கல்லியில் கவாஜாவுக்கு இடது புறம் நல்ல வேகமாகச் சென்றது அவர் பாய்ந்து ஒரு கையில் பிடித்தார், மிகப்பிரமாதமான கேட்ச், திகைபூட்டும் கேட்சில் 3 ரன்களில் கோலி வெளியேறினார், எல்லா பில்ட்-அப்புக்கும் ஆப்பு வைக்கப்பட்டது. இந்தக் கேட்ச்களைத்தான் இங்கிலாந்தில் டேவிட் மலான் கோட்டை விட்டனர், கோலி அங்கு பிழைத்தார், இங்கு பிழைக்க முடியவில்லை. ஆனால் கோலி நின்றிருந்தால் இந்தப் பிட்சில் 200 அடித்திருப்பார். ஆனால் ஆஸ்திரேலியாவின் துல்லியம் திட்டமிடுதல், பீல்டிங் கோலியைக் கவிழ்த்தது.

ரஹானே இறங்கி நேதன் லயன் பந்தில் ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்தார். ஆனால் ஹேண்ட்ஸ்கம்ப் கேட்சைப் பிடிக்கவில்லை. ஆனால் அதன் பிறகு ஆட்டத்தின் போக்குக்கு எதிராக லயன் பந்தை மேலேறி வந்து மிகப்பெரிய சிக்சரை லாங் ஆனில் அடித்தார். புஜாரா கமின்ஸை ஒரு பேக்புட் பஞ்ச் அடித்து பவுண்டரிக்கு அனுப்பினார், இந்த 2 ஷாட்கள்தான் இதுவரை சிறந்த ஷாட்கள். 13 ரன்களில் நன்றாக ஆடிவந்த நிலையில் ஹேசில்வுட் வீசிய மிகவும் வெளியே சென்ற பந்தை படுமோசமாக, சோம்பேறித்தனமாக பேட்டை விட்டார் 2வது ஸ்லிப்பில் ஹேண்ட்ஸ்கம்ப் கேட்ச் எடுத்தார். இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்தது.

புஜாரா தன் வழக்கமான பொறுமையுடன் ஆடுகிறார், இப்படித்தான் இங்கு ஆட வேண்டும், ஆனால் அவர் ஒரு முனையில் ஆடிகொண்டேயிருக்க வேண்டும்.

ஆஸ்திரேலிய அணியில் ஹேசில்வுட் 2 விக்கெட், ஸ்டார்க் 1, கமின்ஸ் மிக முக்கிய விக்கெட்டான விராட் கோலி விக்கெட்டைக் கைப்பற்றினார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x