Published : 25 Dec 2018 08:33 AM
Last Updated : 25 Dec 2018 08:33 AM

பாக்ஸிங்டே டெஸ்ட்: இந்திய அணியில் இரு முக்கிய மாற்றம்; ஆஸி. அணியில் ஹேண்ட்ஸ்கம்ப் நீக்கம்

மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை தொடங்கவுள்ள பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இருமுக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டு விளையாடும் 11 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, பெர்த் டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு முதல் இன்னிங்ஸில் கேட்ச் பிடித்து சர்ச்சைக்குள்ளான ஹேண்ட்ஸ்கம்ப் நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணியும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸி. அணியும்வென்று 1-1 என்று சமநிலையில் உள்ளன.

இந்நிலையில், கிறி்ஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் மெல்போர்னில் நாளை நடைபெறும் பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் வெல்ல இரு அணிகளும்தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த டெஸ்ட் போட்டியில் வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றுவதற்கு ஏறக்குறைய ஆயத்தமாகிவிடும் என்பதால், இந்த டெஸ்ட் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மெல்போர்ன் மைதானத்தில் இதுவரை கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் இரு தோல்விகள் 3 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதேசமயம், ஆஸ்திரேலிய அணி ஒரு வெற்றி, 3 தோல்வி, ஒரு போட்டியை டிரா செய்துள்ளது. ஆதலால், மெல்போர்ன் மைதானத்தில் வெற்றியை இந்திய அணி அதிகம் எதிர்பார்க்கிறது.

மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கானவிளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அதில், கடந்த இரு டெஸ்ட் போட்டிகளாக பேட்டிங்கில் சொதப்பிவரும் தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல்.ராகுல், முரளி விஜய் இருவரும் 3-வது டெஸ்ட் போட்டிக்கு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

அதற்குப் பதிலாக மயங்க் அகர்வால், ரவிந்திரஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளனர். தொடக்க வீரர்களாக ஹனுமா விஹாரியும், மயங்க் அகர்வாலம் களமிறங்க உள்ளனர். நடுவரிசையில் பலப்படுத்த ரோஹித் சர்மா, ரவிந்திர ஜடேஜா உள்ளனர்.

அஸ்வினுக்கு ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால், ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து, மேற்கிந்திய்தீவுகள் டெஸ்ட் தொடருக்குத் தேர்வு செய்யப்பட்டு ஒருமுறை கூட களமிறங்காத மயங்க் அகர்வாலுக்கு முதல் முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது. நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் சமீபத்தில் சதம் அடித்து தன்னை நிரூபித்ததால், அவர் நியூசிலாந்தில் இருந்தவாரு ஆஸ்திரேலியாவுக்கு அழைக்கப்பட்டார்.

ஹர்திக் பாண்டியாவுக்கு இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் அனேகமாக 4-வது டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெர்த் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விராட் கோலிக்கு சர்ச்சைக்குரிய வகையில் கேட்ச் பிடித்த ஹேண்ட்ஸ்கம்ப் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் மிட்ஷெல் மார்ஷ் அழைக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி விவரம்:

விராட் கோலி(கேப்டன்), அஜின்கயே ரஹானே, மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, சட்டீஸ்வர் புஜாரா, ரோஹித் சர்மா, ரிஷ்ப் பந்த், ரவிந்திர ஜடேஜா, முகமது ஷமி, இசாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா

ஆஸி. அணி விவரம்

ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், மிட்ஷெல் மார்ஷ், டிம் பெய்ன், பாட் கம்மின்ஸ், மிட்ஷெல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசல்வுட்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x