

ஐ லீக் கால்பந்து தொடரில் மோகன் பகன் அணிக்கு எதிரான ஆட்டத்தை 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது சென்னை சிட்டி எப்சி அணி.
கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுவ பாரதி கிரங்கன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல்கள் ஏதும் அடிக்கப்படவில்லை. 50-வது நிமிடத்தில் சோனி நார்டி அடித்த கோலால் மோகன் பகன் அணி 1-0 என முன்னிலை பெற்றது. இந்த கோலை சென்னை சிட்டி அணி வீரர்களான எட்வின் வான்ஸ்பால், கவுரவ் போரா ஆகியோரை கடந்து அற்புதமாக சோனி நார்டி அடித்திருந்தார்.
இதன் மூலம் தனது உடல் தகுதி குறித்த பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சோனி நார்டி. இதைத் தொடர்ந்து 80-வது நிமிடம் வரை மோகன் பகன் அணி ஆட்டத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருந்தது. கடைசி 8 நிமிடங்கள் இருந்த நிலையில் சென்னை சிட்டி அணி வீரர்கள் கூடுதல் ஆக்ரோஷத்துடன் விளையாடினார்கள்.
82-வது நிமிடத்தில் மோகன் பகன் வீரர்களான அபிஷேக் அம்பேகர், லால்சாவான்மிகா ஆகியோருக்கு ஊடாக பந்தை கடத்திய சென்னை சிட்டி அணியின் சென்ட்ரல் டிபன்டர் ராபர்டோ எஸ்லாவா அதனை நட்சத்திர வீரரான நெஸ்டர் கோர்டிலோவுக்கு பாஸ் செய்ய, அவர் கச்சிதமாக கோலாக மாற்றினார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. இதன் பின்னர் கடைசி வரை போராடியும் இரு அணிகளால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
சென்னை சிட்டி எப்சி அணிக்கு இது 2-வது டிராவாக அமைந்தது. இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை சிட்டி எப்சி அணி 17 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. மோகன் பகன் அணி 6 ஆட்டத்தில் 9 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் தொடர்கிறது.