Published : 18 Dec 2018 12:25 PM
Last Updated : 18 Dec 2018 12:25 PM

உற்சாகமாக முதுகில் தட்டிக் கொடுத்த பெய்ன்: கோபமாகச் சென்ற கோலி; நெட்டிசன்கள் விமர்சனம்

பெர்த்தில் இரண்டாவது டெஸ்ட் முடிவில் முதுகில் உற்சாகமாகத் தட்டிக் கொடுத்த ஆஸ்திரேலிய கேப்டன் பெய்னிடம் கோலி நடந்து கொண்ட விதத்தை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

பெர்த்தில் இந்தியா  - ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 146 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 8 விக்கெட்டுகள் வீழ்த்திய நாதன் லயன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், இந்திய கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு இடையே தொடர்ந்து வார்த்தை மோதல் நடந்தது. இதனைத் தொடர்ந்து  நடுவர்கள் எச்சரித்து அனுப்பிய நிலையில், ஆட்டம் முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொண்டு விடை பெற்றனர்.

அப்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பெய்ன் உற்சாகமாக இந்திய அணி கேப்டன் கோலிக்கு கை கொடுத்து முதுகைத் தட்டிக் கொடுக்க, கோலியோ கை கொடுத்துவிட்டு பெய்னைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் ஒருவித இறுக்கமான முகத்துடன் அவரைக் கடந்து சென்றார்.

தற்போது இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

கேப்டன் கோலியின்  அணுகுமுறை சரியல்ல. போட்டி முடிந்து விட்டது, வெற்றி தோல்வி  விளையாட்டில் சகஜம். போட்டி முடிந்தவுடன் அதனை மறந்து எதிர் அணியைப் பாராட்ட வேண்டும் என்று அந்த வீடியோவைக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிலர் கோலி செய்யும் அனைத்திற்கு குற்றம் கண்டுபிடிக்காதீர்கள் என்று கோலிக்கு ஆதரவாகவும் பதிவிட்டுள்ளனர்.

அதே சமயத்தில் போட்டி முடிந்தவுடன் இந்திய அணி வீரர்களுடன் நட்புறவோடு கை குலுக்கிய ஆஸ்திரேலிய கேப்டன்  பெய்னுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x