

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளின் எண்ணிக்கையை மத்திய அரசு கணிசமாக குறைத்துள்ளது.
இந்திய ஒலிம்பிக் சங்கம் மொத்தம் 942 பேரை பரிந்துரைத்தது. ஆனால் மத்திய அரசு 679 பேரை மட்டுமே தேர்வு செய்துள்ளது. இதில் 516 பேர் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள், 163 பேர் பயிற்சியாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆவர். கடந்த முறை 35 விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் பங்கேற்றனர். இந்தமுறை 28 விளையாட்டுகளில் மட்டுமே இந்திய வீரர்கள் களமிறங்குகின்றனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு வீரர்களை அனுப்புவது குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானந்த் சோனோவால் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆலோசனை நடத்தினார். அதில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள வீரர்களை மட்டும் அனுப்பி வைக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து வீரர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டது.
ஆசிய விளையாட்டுப் போட்டி தென்கொரியாவின் இன்சியோனில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 2010-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்தியாவில் இருந்து மொத்தம் 933 பேர் சென்றிருந்தனர்.
நீச்சல், வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், கூடைப்பந்து, குத்துச்சண்டை, சைக்கிள் பந்தயம், குதிரையேற்றம், கால்பந்து, கோல்ப், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட்பால் , ஹாக்கி, ஜூடோ, கபடி, செபாக் தக்ரா, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், டேக்வாண்டோ, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், கைப்பந்து, மல்யுத்தம், ஊசூ, பளுதூக்குதல், தனி படகு போட்டி, பாய்மர படகு, துடுப்பு படகு ஆகிய 28 வகையான போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர்.