ரோஹித் சர்மா விளையாடுவாரா? சிட்னி டெஸ்ட்டில் பங்கேற்பதில் சந்தேகம்

ரோஹித் சர்மா விளையாடுவாரா? சிட்னி டெஸ்ட்டில் பங்கேற்பதில் சந்தேகம்
Updated on
1 min read

சிட்னியில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம் பெறமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. அடிலெய்ட், மெல்போர்ன் டெஸ்ட் போட்டிகளில் வென்று 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது. பார்டர்-கவாஸ்கர் கோப்பையையும் தக்கவைத்துக்கொண்டது.

இந்நிலையில், 2019 ஜனவரி 3-ம் தேதி சிட்னியில் நடைபெறும் கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை 3-1 என்ற கணக்கில் வெல்ல இந்திய அணி மும்முரமாக இருக்கிறது. இந்நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா இடம் பெறமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரோஹித் சர்மாவுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதால், தனது குழந்தையைக் காண மும்பை திரும்ப இருப்பதால், அவர் 4-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்குப் பின், நீண்ட இடைவெளிக்குப் பின் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு ரோஹித் சர்மா தேர்வாகினார். இந்தத் தொடரில் 2 போட்டிகளில் விளையாடிய ரோஹித் சர்மா அரை சதம் அடித்து 106 ரன்கள் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மா 4-வது டெஸ்ட் போட்டியில் இடம்பெறாவிட்டால், அவருக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம் பெறக்கூடும். காயம் குணமடைந்து, முழு உடற்தகுதியுடன் ஹர்திக் பாண்டியா ஆஸ்திரேலியா வந்து சேர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிட்னி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரி என்பதால், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கலாம். ஆதலால், அஸ்வின், குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in