Published : 27 Dec 2018 07:58 PM
Last Updated : 27 Dec 2018 07:58 PM
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் கிட்டத்தட்ட 2 நாட்கள் ஆடி இந்திய அணி 443 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற நிலையில் டிக்ளேர் செய்தது. இந்த ரன்கள் வெற்றி பெற போதுமானவையே என்று சதநாயகன் செடேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார்.
319 பந்துகளில் புஜாரா 106 ரன்கள் எடுத்து தாழ்வாக வந்த கமின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
“இந்தப் பிட்சில் ரன்களை விரைவில் எடுக்க முடியாது. ஆனால் 2 நாட்களில் ரன்கள் குறைவாகத்தான் அடித்திருக்கிறோம். இருப்பினும் ஒருநாளில் 200 ரன்கள் என்பதே கடினமான வேலைதான். போதுமான ரன்களை எடுத்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.
பிட்ச் இன்று பார்த்தோமானால் கொஞ்சம் தளர்வடைய தொடங்கியுள்ளது, பந்து மேலும் கீழும் வரத் தொடங்கியுள்ளது. நேற்றைக்கும் இன்றைக்கும் 2 நாட்கள் பேட் செய்ததை வைத்துக் கூறுகிறேன், முதல் நாள் பிட்சை விட 2 ம் நாள் பிட்ச் வித்தியாசமாக இருந்தது. இப்போது பேட் செய்வது கொஞ்சம் கடினம்தான். நாளை முதல் இன்னும் கடினமாகும். நம் பவுலர்கள் நன்றாகவ் வீசுகின்றனர், எனவே போதுமான ரன்கள் நம்மிடம் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.
இந்தப் பிட்சில் வேகத்தைக் கணிப்பது கடினம். ஷார்ட் பிட்ச் அல்லாத பேக் ஆஃப் லெந்த் பந்துகளே என் விரல்களைப் பதம்பார்த்தன. நான் அவுட் ஆன பந்தை நான் ஒன்றுமே செய்ய முடியாது. எனவே தாழ்வாக வந்தால் பிழைப்பது அதிர்ஷ்டமே.
நான் என் சதத்துக்காக கடினமாக உழைக்க வேண்டியதாகப் போயிற்று. சதத்துக்காக 4 செஷன்கள் எடுத்து கொண்டேன். அப்படி எனக்கு ஆகாது. சதத்தை முக்கால்வாசி 3 செஷன்களில் எடுக்கவே பார்ப்பேன். ஆனால் இந்தப் பிட்சில் 4 செஷன்களுக்கும் மேல் ஆகும் போல் தெரிந்தது. சவாலான பிட்ச், ஒரு பேட்ஸ்மெனாக ரன்கள் எடுப்பது கடினமாக இருந்தது.
சில வேளைகளில் விமர்சனங்களை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் ரன்கள் எடுக்கும் வரை, இந்தியா வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் வரை அனைவருக்கும் மகிழ்ச்சியே.
சர்வதேச மட்டத்தில் ஆடும்போது நான் யாரையும் திருப்திபடுத்த வேண்டியதில்லை. உள்நாடாக இருந்தாலும் வெளிநாடாக இருந்தாலும் ரன்கள் எடுக்க வேண்டும் அவ்வளவே, அதுதான் என் வேலை. என்னால் எங்கும் ரன்கள் எடுக்க முடியும் என்பது எனக்குத் தெரியும், ஆனால் நான் இந்தியாவில் மட்டும்தான் ரன்கள் எடுப்பவன் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உள்நாட்டில்தான் அதிகம் ஆடுகிறோம். அயல்நாடுகளில் சிலசமயங்களில் ரன்கள் எடுப்பது கடினமாக அமைந்து விடுகிறது. ஆனால் நான் 2014 தொடரிலிருந்து பாடங்கள் கற்றுக் கொண்டேன் அது இந்தத் தொடரில் உதவுகிறது” என்றார் புஜாரா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT