ஷான் மார்ஷுக்கு வீசிய வேகம் குறைக்கப்பட்ட திடீர் யார்க்கரை வீசச் சொன்னது யார்? ஜஸ்பிரித் பும்ரா ருசிகரப் பகிர்வு

ஷான் மார்ஷுக்கு வீசிய வேகம் குறைக்கப்பட்ட திடீர் யார்க்கரை வீசச் சொன்னது யார்? ஜஸ்பிரித் பும்ரா ருசிகரப் பகிர்வு
Updated on
1 min read

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்குச் சார்பாக டெஸ்ட் போட்டியை திருப்பிய ஜஸ்பிரித் பும்ராவின் திகைக்க வைக்கும் வேகப்பந்து வீச்சில் ஷான் மார்ஷின் விக்கெட் மிக முக்கியமானது, அதுவும் ஆட்டத்தின் உஷ்ணத்துக்கு எதிராக அந்த ஒரு பந்து சற்றே மாற்றி வீசப்பட்டது.

பிட்ச் எளிதாக இருந்தது, அவ்வப்போது மாறும் பவுன்ஸ் தவிர, பந்தும் அதன் கடினத்தன்மையை இழந்திருந்தது, ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படும் கூகபரா பந்து கடினத்தன்மையை இழந்து விட்டால் வேகம் மட்டுமே எடுபடும். ஆகவே பும்ரா அதிவேகமாக வீசி வந்தார்.

ஆனால் உணவு இடைவேளைக்கு முன்பாக ஷான் மார்ஷ் நிம்மதியாக ஆடிவிட்டு ஓய்வறை திரும்பி மீண்டும் வரலாம் என்று நினைத்திருப்பார், ஆனால் பும்ரா வேறு ஒரு திட்டம் வைத்திருந்தார். அதே வேகத்தில் ஓடி வந்து, ஆக்‌ஷனை மாற்றாமல் ஒரு மேலிருந்து இறங்கும் ஒரு யார்க்கரை வேகம் குறைவாக ஸ்லோயர் ஒன்னாக வீசினார், ஷான் மார்ஷ் இந்தச் சாதுரியத்தை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. கால்காப்பில் வங்கி எல்.பி.ஆனார்.

இந்தப் பந்தை அப்போது வீசியதன் பின்னணியில் முக்கியமாக ரோஹித் சர்மா இருந்ததாக பும்ரா தெரிவித்தார்.

“நான் பந்து வீசிக் கொண்டிருந்த போது பிட்சும் மந்தமாக இருந்தது. பந்தும் சற்றே மென்மையடைந்து விட்டது.  ஒன்றும் பெரிதாக நடக்கவும் இல்லை. அப்போதுதான் கடைசி பந்தை வீச வந்தேன், ரோஹித் சர்மா மிட் ஆஃபில் நின்று கொண்டிருந்தார். அவர் என்னிடம், ‘நீ ஒரு வேகம் குறைந்த ஸ்லோயர் ஒன்னை முயற்சி செய்து பார்க்கலாமே, நீ ஒருநாள் கிரிக்கெட்டில் வீசுவது போல’ என்றார். 

எனக்கும் அது சிறந்த யோசனையாகப் பட்டது, ஏன் முயற்சி செய்யக் கூடாது. ஒன்றும் நடக்கவில்லை, ஸ்லோ பந்து பயன்படுத்தித்தான் பார்ப்போமே என்று வீசினேன், ஆனால் பந்து சரியாக அமைந்தது. இந்த விக்கெட் எனக்கு நிரம்ப மகிழ்ச்சியளித்த விக்கெட்டாக அமைந்தது.

அதாவது ஃபுல் ஸ்லோ பந்தை வீசுவது ஒன்று பந்து மேலிருந்து அவர் கால்களில் இறங்க வேண்டும், அல்லது ஷார்ட் கவருக்கு கேட்ச் ஆக வேண்டும், இதுதான் திட்டம். கடைசியில் ஃபுல் யார்க்கர் வேலை செய்தது. 

ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஓவர்கள்தான் வீசப்போகிறோம் அதனால் யார்க்கர் வீச முடியும் ஏனெனில் யார்க்கர் வீசுவதற்கு சக்தி தேவை, டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 ஓவரக்ள் வீசி விட்டு யார்க்கர்களை சக்தியுடன் வீசுவது கடினம். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்லோபந்துகள் தரம் குறைக்கப்பட்ட ஒரு பந்தாகும்.  ரிவர்ஸ் ஸ்விங்குடன் சேர்ந்தால் ஸ்லோ பந்துகள் பிரமாதமாக இருக்கும்.” இவ்வாறு கூறினார் பும்ரா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in