Published : 12 Dec 2018 10:49 AM
Last Updated : 12 Dec 2018 10:49 AM

கும்ப்ளேயை  ‘வில்லனாகச் சித்தரித்து’ விராட் கோலி கொடுத்த தொடர் நெருக்கடி: ரவி சாஸ்திரி நியமனத்தில் விதிமுறைகள் மீறப்பட்டதாக எடுல்ஜி பரபரப்பு புகார்

விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் நீங்காக் கறையாகத் திகழ்வது ஸ்பின் லெஜண்ட் அனில் கும்ப்ளேயை விலக வைத்ததே.  இந்நிலையில் உச்ச நீதிமன்றம் நியமித்த கமிட்டி ஆஃப் அட்மினிஸ்ட்ரேட்டர்ஸ் (சி.ஓ.ஏ) அல்லது நிர்வாகிகள் கமிட்டியைச் சேர்ந்த டயானா எடுல்ஜி, கும்ப்ளேயை நீக்கி விட்டு ரவி சாஸ்திரியை தலைமைப் பயிற்சியாளராக நியமித்ததில் பிசிசிஐ விதிமீறல்களைச் செய்துள்ளது என்று பரபரப்பு குற்றம் சாட்டினார்.

 

தற்போது மகளிர் இந்திய கிரிக்கெட்டில் ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது, கேப்டன் ஹர்மன்பீரித் கவுர் உள்ளிட்டோர் பயிற்சியாளராக ரொமேஷ் பொவார் நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர், ஆனால் சிஓஏ தலைமை விநோத் ராய், கபில் தேவ் உள்ளிட்டோர் தலைமையில் மகளிர் அணிக்கு பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க குழு ஒன்றை அமைத்துள்ளார்.

 

இதில் மற்றொரு உறுப்பினரான எடுல்ஜிக்கு முற்றிலும் விருப்பமில்லை. ஹர்மன் பிரீத் கவுரும், வைஸ் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும் இடைக்கால பயிற்சியாளர் ரொமேஷ் பொவார் நீடிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர், இதற்கு விநோய் ராய் ஒப்புக் கொள்ளாமல் வீரர்கள் பயிற்சியாளரை வாக்கெடுப்பு மூலமெல்லாம் தேர்வு செய்ய முடியாது என்று கைவிரித்துள்ளார்.

 

இதில்தான் சற்றே கோபமடைந்த டயானா எடுல்ஜி, ஏன் ஆடவர் கிரிக்கெட் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, அனில் கும்ப்ளே வேண்டாம் என்று கூறிய போது செவிசாய்த்தீர்கள், அதே உரிமை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு, கேப்டனுக்குக் கிடையாதா என்று பிரச்சினையைத் தொடங்கிய போது, விராட் கோலி, கும்ப்ளேயை நீக்கக் கொடுத்த நெருக்கடி பற்றிய ரகசிய தகவல் ஒன்றை வெளிப்படுத்தினார்.

 

கும்ப்ளேயின் கண்டிப்பான பயிற்சிமுறைகள் பிடிக்காத விராட் கோலி பிசிசிஐ சி.இ.ஓ. ராகுல் ஜோஹ்ரிக்கு தொடர்ந்து கும்ப்ளேயைப் பற்றி குறுஞ்செய்திகளை அனுப்பிய வண்ணம் கடும் நெருக்கடி கொடுத்துள்ளார்.  இந்த ராகுல் ஜோஹ்ரிதான் சமீபத்தில் மீ டூவில் சிக்கி தப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சச்சின் டெண்டுல்கர், கங்குலி, லஷ்மண் ஆகியோர் அடங்கிய சிஏசி, இந்த விஷயத்தில் கும்ப்ளேதான் தங்கள் தெரிவு என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். ஆனால் விநோத் ராய், கும்ப்ளேவுக்கும் கோலிக்கும் கருத்து வேறுபாடுகள் முற்றுகின்றன என்று கூறியதையடுத்து சச்சின், லஷ்மண், கங்குலி மூவர் குழு விராட் கோலியை சந்தித்து அவரிடம் பேசிப்பார்த்தனர். ஆனால் தோல்வியடைந்தனர்.

 

இந்நிலையில் டயானா எடுல்ஜி கூறியதாவது:

 

சிஏசி கூறியும், வலியுறுத்தியும் அனில் கும்ப்ளே தலைமைப் பயிற்சியாளராகத் தொடர்வதை விராட் கோலி எதிர்த்தார். அதே போல் மகளிர் கிரிக்கெட்டில் கேப்டனும் துணை கேப்டனும் ரொமேஷ் பவார் நீடிக்க வேண்டும் என்கின்றனர் இதை மட்டும் ஏன் அனுமதிக்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பி விநோத் ராய்க்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

 

“இவர்கள் தங்கள் கருத்தில் உண்மையாகவும் நேர்மையாகவும் வெளிப்படையாக இருந்துள்ளனர், விராட் கோலி அப்படியல்ல, ராகுல் ஜோஹ்ரிக்கு தொடர்ச்சியாக மெசேஜ் அனுப்பி கும்ப்ளேயை நீக்குமாறு மறைமுக நெருக்கடி கொடுத்தார். உடனே அவர் பேச்சைக் கேட்டு பயிற்சியாளரை மாற்றிவிட்டீர்கள்.

 

மேலும் ரவி சாஸ்திரி காலக்கெடுவுக்குள் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை, அவருக்காக காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டது, இது விதிமுறைகளை மீறுவதாகும் என்று நான் அப்போது எதிர்த்தது பதிவாகியுள்ளது.  கும்ப்ளே ஒரு லெஜண்ட், இந்த விஷயத்தில் பாவம் அவர் அவமானப்படுத்தப்பட்டார், வில்லனாகச் சித்தரிக்கப்பட்டார். ஆனால் அவர் பெருந்தன்மையுடன் எதையும் சொல்லாமல் விலகினார்,  இதனால் அவரை நான் பெரிதும் மதிக்கிறேன். விதிமுறைகளும் மீறப்பட்டன அப்போதே நான் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தேன்.

 

இதற்குப் பதில் அளித்த விநோத் ராய், கும்ப்ளே விலகியதில் கோலியின் பங்கு உண்டு என்றார். கோலிக்கும் கும்ப்ளேவுக்கும் வேறுபாடுகள் தோன்றின அதனால் கும்ப்ளே விலகினார் என்று கூறினார் விநோத் ராய்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x