Published : 04 Dec 2018 03:07 PM
Last Updated : 04 Dec 2018 03:07 PM

தோனியும், ஷிகர் தவணும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடமாட்டார்களா? ஏன்? - சுனில் கவாஸ்கர் காட்டம்

அடுத்த 6 மாதகாலம் இந்திய அணிக்கு பெரும் சவால்கள் காத்திருக்கிறது, உலகக்கோப்பை கிரிக்கெட் உள்ளது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் உள்ளது, ஆனால் இதற்கெல்லாம் தயார்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார் தோனி, இவரை விமர்சனம் செய்பவர்களை அவரது ரசிகர்கள் விசில்போடு மனோபாவத்துடன் திட்டித் தீர்த்து வருகிறார்கள்.

பயிற்சி, தயாரிப்பு இல்லாமலேயே நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் வீரர்களின் இடத்தை எந்த வித உழைப்பும் இல்லாமல் லாவகமாகப் பிடித்து விடுகிறார் தோனி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டா உடனே அவரைத் தேர்வு செய்வது ஏதோ நிர்பந்தம் என்பதைக் காட்டும் விதமாக உடனடியாகத் தேர்வு செய்து விடுகின்றனர். ஏற்கெனவே ஆடிக்கொண்டிருக்கும் விக்கெட் கீப்பர்களில் தினேஷ் கார்த்திக்கோ அல்லது ரிஷப் பந்த்தோ இவருக்கு வழிவிடவேண்டும், என்பது எழுதப்படா விதியாகி விட்டது, இதைக் கேள்வி கேட்டால் 2 உலகக்கோப்பை வென்றார் என்று கடந்தகாலத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர் ரசிகர்கள். சர்வதேச கிரிக்கெட் என்பது நம் குழந்தையுடன் விளையாடுவது போல் அல்லவே?

இந்நிலையில் சுனில் கவாஸ்கர் இதே கேள்வியைத் தொடர்ந்து எழுப்பி வருகிறார், ஷிகர் தவண், தோனி என்ன விதிவிலக்கா? ஏன் இவர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடித் தங்களை நிரூபிக்க வேண்டியதில்லை?  என்று கேள்வி எழுப்பிய கவாஸ்கர், இந்தியா டுடேவுக்கு இது பற்றி கூறியபோது, “நாம் தோனியிடமும் தவணிடமும் ஏன் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடுவதில்லை என்று கேட்கக் கூடாது. நாம் உண்மையில் பிசிசிஐ, அதன் தேர்வுக்குழு ஆகியோரிடம் இந்தக் கேள்வியை எழுப்ப வேண்டும். ஏன் உள்நாட்டு கிரிக்கெட்டை இவர்கள் தவிர்க்க அனுமதிக்கிறீர்கள்? இந்திய அணியில் ஆடாத போது உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆட வேண்டியதுதானே?

இந்திய அணி நன்றாக ஆட வேண்டும் என்றால் வீரர்கள் முதன்மையான பார்மில் இருப்பது அவசியம். அதற்கு அவர்கள் கிரிக்கெட்டுடன் தொடர்பில் இருக்க வேண்டாமா?” என்கிறார் கவாஸ்கர்

தற்போதைய டெஸ்ட் அணியில் ஷிகர் தவண் இல்லை, ஆனால் அவர் மெல்போர்னில் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்து வருகிறார், தோனி ஒரு ராஜா வீட்டு கன்னுக்குட்டி 2014-ல் வணிக நோக்கங்களுக்காக டெஸ்ட் போட்டிகளை உதறிவிட்டு ஒருநாள், டி20 வடிவத்தை தேர்வு செய்த அவர் 4நாள் கிரிக்கெட், 3 நாள் கிரிக்கெட்டில் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் ஆடுவதேயில்லை. தோனி ஆஸியில் ஒருநாள் கிரிக்கெட் ஆடினால் சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு மட்டையையும் கிளவ்வையும் தொடுவார்.

இதனைச் சுட்டிக்காட்டிய சுனில் கவாஸ்கர், “ஆஸி.க்கு எதிரான டி20-யில் தோனி ஆடவில்லை, மே.இ.தீவுகளுக்கு எதிராகவும் ஆடவில்லை. டெஸ்ட் தொடருக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை. எனவே அவர் கடைசியாக  அக்டோபரில் ஆடினார், அடுத்து ஜனவரியில் ரெடிமேடாக வந்து ஆடுவார். இது மிகப்பெரிய இடைவெளி. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்களில் தோனி சரியாக  ஆடவில்லை எனில் உலகக்கோப்பைக்கு அவரைத்தேர்வு செய்தால் அது நிச்சயம் பல கடினமான தர்மசங்கடமான கேள்விகளுக்கு இட்டுச் செல்லும் என்பதே உண்மை.

வயதாக வயதாக ரிப்ளெக்ஸ் குறையும்.  ஆகவே உள்நாட்டு கிரிக்கெட்டில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஆடினால் நீண்ட இன்னிங்ஸை ஆட முடியும். அது நல்ல பயிற்சியாக அமையும்” என்றார் சுனில் கவாஸ்கர்.

தோனியின் நலன்களில் அக்கறை காட்டும் பிசிசிஐ கவாஸ்கரின் இந்தக் கேள்வியை காதில் போட்டுக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x