Published : 01 Dec 2018 01:53 PM
Last Updated : 01 Dec 2018 01:53 PM

நம்பவே முடியல... நான் விக்கெட் எடுத்தேனா? - அடக்கமுடியாமல் சிரித்த விராட் கோலி

ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சதம் அடித்த வீரரின் விக்கெட்டை வீழ்த்தியபின், தன் பந்துவீச்சில் வீழ்த்தப்பட்ட விக்கெட்டை நினைத்து அடக்க முடியாமல் கேப்டன் விராட் கோலி சிரித்துக்கொண்டே இருந்தார்.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 6-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியினர், ஆஸ்திரேலிய லெவன் அணியினருடன் 4 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினார்கள்.

முதல் நாள் மழையால் ரத்துசெய்யப்பட்ட நிலையில், 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய லெவென் அணி நேற்றைய 3-ம்நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் சேர்த்தது.

கடைசி நாள் ஆட்டம் இன்று நடந்தது. நீல்சன், ஹார்டே களத்தில் இருந்தனர். இந்திய அணியின் பந்துவீச்சை எளிதாகச் சமாளித்து ஆடிய நீல்சன் சதமடித்தார். நீல்சனின் நீடித்த பேட்டிங் இந்திய வீரர்களுக்கு பிரச்சினையாகவே இருந்தது. அஸ்வின், உமேஷ் யாதவ், ரவிந்திர ஜடேஜா, இசாந்த் சர்மா எனப் பலரும் பந்துவீசியும் நீல்சன் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.

ஆனால், திடீரென விராட் கோலி பந்துவீசத் தொடங்கிய விராட் கோலி, நீல்சன் விக்கெட்டை வீழ்த்தினார். விராட் கோலி வீசிய பந்தை இடது கை ஆட்டக்காரரான நீல்சன் தூக்கி அடிக்க மிட் ஆன் திசையில் நின்றிருந்த உமேஷ் யாதவ் கையில் கேட்சாக மாறியது.

தனது பந்துவீச்சில் சதம் அடித்து நல்ல ஃபார்மில் இருந்த ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்துவிட்டதை நினைத்து விராட் கோலிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. விராட் கோலி சிரிப்பைப் பார்த்து ஆட்டமிழந்த நீல்சன் முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டு சென்றார்.

ஆனாலும், விராட்கோலிக்கு தனது பந்துவீச்சு விக்கெட் வீழ்த்தும் அளவுக்கு இருக்கிறதா என சகவீரர்களிடம் கூறி சிரித்துக்கொண்டே இருந்தார். இது அனைவராலும் ரசிக்கப்பட்டது. இந்த விக்கெட் விராட் கோலியின் கணக்கில்  சேராது.

இருப்பினும் சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். கடைசியாக 2014-ம் ஆண்டு ஜனவரி 31-ம்தேதி வெலிங்டனில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மெக்குலம் விக்கெட்டை கோலி வீழ்த்தியதே கடைசி சர்வதேச விக்கெட்டாகும்

மேலும்,2011-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 2 விக்கெட்டுகளும், 2013-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு விக்கெட்டையும் கோலி வீழ்த்தியுள்ளார்.

எனிலும் பயிற்சி ஆட்டத்தில் கடைசி நாளான இன்று 544 ரன்களுக்கு ஆஸ்திரேலிய லெவன் அணி ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்தது டிரா செய்தது. முரளி விஜய் சதம் அடித்து 129 ரன்களிலும், ராகுல் 62 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x