Published : 29 Dec 2018 04:48 PM
Last Updated : 29 Dec 2018 04:48 PM

‘மயங்க் அகர்வாலின் ரஞ்சி முச்சதம் ரயில்வே கேன்டீன் ஊழியர்கள் அணிக்கு எதிராக எடுக்கப்பட்டது’- ஆஸி. வர்ணனையாளர் இழிவுப் பேச்சு- கடும் கோபத்தில் இந்திய அணி

நடைபெற்று வரும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் மண்ணைக்கவ்வும் நிலையில் இருக்கும் போதும் ஆஸ்திரேலிய வர்ணனை அறையில் எதிரணி வீரர்களைப் பற்றிய திமிர் பிடித்த கேலிப் பேச்சுக்குக் குறைவில்லாமல் உள்ளது.

 

இதில் கெரி ஓ’கீஃப் என்ற வர்ணனையாளருக்கு உள்ள நகைச்சுவை உணர்வெல்லாம் இந்திய வீரர்களை கேலி பேசுவதாகவே அமைந்துள்ளது, முதல் நாள் பிட்சைப் பார்த்து விட்டு ‘இது புஜாரா பிட்ச்’ என்று மட்டைப் பிட்சை கேலி செய்யப் புஜாராவைப் பயன்படுத்தினார்.

 

அறிமுக வீரரான மயங்க் அகர்வால் மிகவும் தரமான 2 இன்னிங்ஸ்களை இந்த டெஸ்ட் போட்டியில் கடினமான சூழ்நிலையில், பிட்சில் எடுத்துள்ளார், ஆனால் அவர் முதல் நாள் ஆடும்போது மயங்க் அகர்வால் எடுத்த ரஞ்சி முச்சதம் பற்றி இழிவாகப் பேசியது சர்ச்சையாகியுள்ளது.

 

அதாவது மயங்க் அகர்வாலின் ரஞ்சி முச்சதம், “ரயில்வேஸ் கேன்டீன் ஊழியர்கள் லெவன் அணிக்கு எதிராக எடுக்கப்பட்டதாக இருக்கும்” என்று ஜோக் அடிப்பதாக நினைத்துக் கொண்டு அகர்வாலை இழிவு படுத்தியது இந்திய அணி நிர்வாகத்திடையே கடும் கோபங்களை கிளப்பியுள்ளது.

 

இந்திய பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண் கூறும்போது, “ஆம் இது காயப்படுத்தும் ஒரு கருத்துதான், ஆனால் இப்படிப்பட்ட இழிவான கருத்துகளை சிலர் கூறும்போது நாம் ஒன்றும் செய்ய முடியாமல் போகிறது. அது நம் கட்டுப்பாட்டில் இல்லை.  இந்த காயத்தை மடைமாற்றி களத்தில் நன்றாக ஆடி வெற்றி பெற்றுக் காட்டுவதுதான் பதிலாக இருக்க முடியும்.  அணி நிர்வாகம் சார்பாக ஓ கீஃப் கருத்தை எதிர்த்து அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கப்போவதில்லை.” என்றார்.

 

ரவிசாஸ்திரி பதிலடி கொடுக்கையில், “கெரி ஓ கீஃப் நீங்கள் உங்கள் கேன்டீனைத் திறக்கும்போது மயங்க் அங்கு வந்து உங்கள் காஃபியை முகர்ந்து பார்ப்பார். அதை இந்திய காஃபியுடன் ஒப்பிடுவார். உங்கள் காஃபி சிறந்ததா எங்கள் காபி சிறந்ததா என்பதை அகர்வால் தீர்மானிப்பார்” என்றார்.

 

ஓகீஃப் தனது இந்த கருத்துக்கு மன்னிப்புக் கேட்டார். அதே போல் வேண்டுமென்றா அல்லது தெரியாமலா இந்திய வீரர்கள் பெயரை மாற்றி மாற்றி அவ்வை சண்முகி பாணியில் கம்பர் கண்ணகி என்பது போல் செடேஷ்வர் ஜடேஜா என்று கூறுவார், ஆனால் சக வர்ணனையாளர்கள் அவரது உச்சரிப்பை கடும் கேலி செய்வதும் நடந்து வருகிறது.

 

கெரி ஓ’கீஃப் 1970களில் ஆஸ்திரேலியாவுக்காக 24 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய லெக் ஸ்பின்னர் ஆவார்.  இவரை சமூகவலைத்தளங்களில் வறுத்து எடுத்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x