

பெர்த்தில் நடந்துவரும் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்ய தீர்மானித்துள்ளது.
பெர்த் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சொர்க்கபுரி என்பதால், இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் இன்று தொடங்கியது. அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1-0 என்று முன்னிலையில் இருப்பதால், பெர்த் டெஸ்டில் கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் விளையாட ஆஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.
பெர்த் ஆடுகளம் பழைய மேற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்க (WACA)மைதானம் அல்ல. இது புதிய மைதானம், புதிய ட்ராப்-இன் பிட்ச், அதாவது வெளியில் தயாரித்து மைதானத்தில் பதிக்கப்பட்ட பிட்ச். ஏற்கெனவே பிட்சில் புற்கள் கூடுதலாக உள்ளன, நல்ல கடினமான பிட்ச், பிறகு அடிக்கும் வெயிலில் ஆங்காங்கே பிளவுகள் ஏற்படும் அப்போது பவுன்ஸ் கொஞ்சம் ஏற்ற இறக்கமாக இருக்கும். மிகப்பெரிய சவால் இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்குக் காத்திருக்கிறது.
இந்த ஆடுகளத்தில் முதல் இன்னிங்ஸில் பேட் செய்யும் அணி 250 ரன்கள் சேர்த்தாலே அது பெரிய ஸ்கோராகும் என்றால் ஆடுகளம் எந்த அளவுக்குக் கடினமானது வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று புரிந்து கொள்ளலாம்.
அதற்கு ஏற்றார்போல் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
பெர்த் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகம் என்பதால், இந்திய அணியில் கூடுதல் வேகப்பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதாவது இசாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ராவா தவிர்த்து உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
சுழற்பந்துவீச்சாளர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை. காயமடைந்த ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹனுமா விஹாரி களமிறங்கியுள்ளார். 6 பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர், 4 வேகப்பந்துவீச்சாளர்கள் என்ற கணக்கில் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
இந்திய அணி விவரம்:
விராட் கோலி(கேப்டன்), முரளி விஜய், கே.எல்.ராகுல், சட்டீஸ்வர் புஜாரா, அஜின்கயே ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், இசாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ்