Last Updated : 26 Dec, 2018 07:18 PM

 

Published : 26 Dec 2018 07:18 PM
Last Updated : 26 Dec 2018 07:18 PM

‘பெரிய தினம், பெரிய வாய்ப்பு... அடையாளம் ஏற்படுத்து...’ மூத்த வீரர்கள் அளித்த ஊக்கம்: மயங்க் அகர்வால் பேட்டி

ஆஸ்திரேலிய மண்ணில் ஓர் அரிய அறிமுகம் கண்ட தொடக்க வீரர் மயங்க் அகர்வால் இந்திய அணிக்காக ஆட தேர்வு செய்யப்பட்டது அதிக குதூகலத்தை ஏற்படுத்தியது ஆனால் தன் உனர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஆட்டத்தில் கவனம் செலுத்தியதாக தெரிவித்தார்.

 

கடினமான ஆஸி. பவுலிங்குக்கு எதிராக மெல்போர்னில் இறங்கி 76 ரன்களை அறிமுகப் போட்டியிலேயே எடுத்து சாதனை நிகழ்த்திய மயங்க் அகர்வால், நேதன் லயன் பந்துகளை சிறப்புற விளையாடி அவருக்கு விக்கெட்டுகள் விழாமல் தடுத்தார்.

 

இந்நிலையில் அவர் கூறியதாவது:

 

மிகப்பிரமாதமான உணர்வு, இந்திய அணி தொப்பியைப் பெற்றதில் மகிழ்ச்சி. நிறைய உணர்ச்சிகள் என் மனதில் அலைபாய்ந்தன. இந்தத் தருணத்தை என் வாழ்நாளில் நிச்சயம் கோண்டாடுவேன். 295வது வீரர் நான் என்பதே முதல் சிந்தனையாக இருந்தது.

 

இந்த உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி அங்கு கவனம் செலுத்துவது சுலபமானதல்ல, ஆனால் கட்டுப்படுத்தித்தான் ஆக வேண்டும். இன்று இறங்கியவுடன் திட்டமிட்டபடி ஆட வேண்டும் என்று எனக்குள்ளேயே நான் கூறிக்கொண்டேன்.  அதாவது ஒரு திட்டத்தின் ஊடாக நான் பயணிக்க வேண்டும், அதைக் கெட்டியாகப் பற்றவேண்டும் என்று நான் திட்டமிட்டேன். ஆகவே இந்த டெஸ்ட் தொடக்கம் எனக்கு பரம திருப்தி அளிக்கிறது.

 

அணியின் மூத்த வீரர்கள் என்னிடம் ‘பெரிய வாய்ப்பு, பெரிய தினம் அடையாளத்தை ஏற்படுத்து’ என்று உற்சாகமளித்தார்கள்

 

இந்த இன்னிங்ஸில் திருப்திதான், ஆனால் இன்னும் ரன்கள் எடுக்கவே ஆசைப்பட்டேன், இன்னும் அதிக ரன்கள் எடுத்து நாள் முடிவில் ஆட்டமிழக்காமல் இருக்க வேண்டும் என்று எண்ணினேன்.

 

மே.இ.தீவுகளுக்கு எதிராக என்னைத்தேர்வு செய்தது எனக்கு மகிழ்ச்சியளித்தது. அது மிகப்பெரிய தருணம், அங்கிருந்து நான் விளையாடுவேனா, இல்லையா என்பது என் கைகளில் இல்லை. நல்ல விஷயம் என்னவெனில் நிறைய உள்நாட்டுப் போட்டிகளில் ஆடினேன், நிறைய இந்தியா ஏ ஆட்டங்களில் ஆடினேன். எனவே களத்தில் இறங்கி என் சிறந்த ஆட்டத்தை அளிக்க வேண்டும் என்பதை நான் உறுதி செய்து கொள்ள முடிந்தது.  விளையாடிக்கொண்டேயிருந்தால் நம் மனதில் என்ன எண்ணம் இருக்குமென்றால் நாம் ஆடும் அணி வெல்ல வேண்டும், அதற்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்பதே.

 

இந்திய அணிக்குத் தேர்வாவோமா என்பது மனதில் தோன்றினாலும், தொழில்பூர்வ கிரிக்கெட் வீரர்களுக்குத் தெரியும் அது நம் கையில் இல்லை என்பது. எனவே அடுத்தது என்ன என்பதை நோக்கி நகர வேண்டும்.  தேர்வாகி விட்டோமா இங்கு என்ன சிறப்பாகக் கொடுக்க முடியுமோ அதனைக் கொடுக்க வேண்டும்.

 

மெல்போர்னில் அறிமுக ஆனது ஒரு ஆசிர்வாதமாகப் பார்க்கிறேன். இந்த இன்னிங்ஸை முதற்படியாகக் கொண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும்.

 

இவ்வாறு கூறினார் மயங்க் அகர்வால்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x