Published : 12 Dec 2018 09:24 AM
Last Updated : 12 Dec 2018 09:24 AM

டிஆர்எஸ் தொழில்நுட்பம் விரக்தியடையச் செய்கிறது: ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் காட்டம்

அடிலெய்டில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியின் போது நடுவர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் டிஆர்எஸ் தொழில்நுட்பம் ஆஸ்திரேலிய அணிக்கு பல்வேறு தருணங்களில் எதிர்விளைவையே கொடுத்தது.

குறிப்பாக அஜிங்க்ய ரஹானே 17 ரன்களில் இருந்த போது கால்காப்பு மற்றும் மட்டையில் பந்துபட்டுகேட்ச் ஆனதாக களநடுவர் நைஜல் லாங் அவுட் கொடுத்தார். ஆனால் டிஆர்எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய போது பந்து மட்டையில் உரசவில்லை என்பது தெரிந்தது. இதனால் ரஹானேவுக்கு கொடுக்கப்பட்ட அவுட் முடிவு திரும்பப் பெறப்பட்டது. இதேபோல் முதல் இன்னிங்ஸில் சதம்அடித்த சேதேஷ்வர் புஜாராவுக்கும் இருமுறை அவுட் கள நடுவரால் கொடுக்கப்பட்ட நிலையில் டிஆர்எஸ் தொழில்நுட்ப உதவியால் அவரது அவுட் முடிவுகளும் தலைகீழாக மாறியது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின்,சிட்னி மார்னிங் ஹெரால்டு’ பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில்கூறியிருப்பதாவது:

டிஆர்எஸ் தொழில்நுட்பம் சரியானது அல்ல. இந்த தொழில்நுட்பத்தில் எனக்கு பதில்கள் கிடைக்கவில்லை. இது விரக்தியடையவே செய்கிறது. அனைவரையும் இது விரக்தியடைய செய்வதாகவே நான் கற்பனை செய்துகொள்கிறேன். டிஆர்எஸ் தொழில்நுட்பத்தில் பல பந்துகள் ஸ்டெம்புகளுக்கு மேலே செல்வதாகவே காட்டப்படுகிறது. ஆனால் உண்மையில் அது போன்று நிகழாது என்பது எனக்கு தெரியும்.

பந்து வீச்சு மற்றும் களத்தில் உள்ள கண்ணோட்டத்தில் இருந்து எங்களுக்கு ஒரு செயல்முறை உள்ளது. அதன் வழியேதான் நானும், பந்து வீச்சாளர்களும் செல்கிறோம். நேதன் லயன் பந்தின் உயரம் குறித்த தகவல்களை தருகிறார். நீங்கள் எல்லோருடைய தகவலையும் எடுத்துக்கொண்டு சிறந்த முடிவுகளை கொடுக்க வேண்டும். இருமுறை எங்களுக்கு தவறான தீர்ப்பு கிடைத்தது. ஆனால் இது நடக்கலாம்.

மிட்செல் ஸ்டார்க் நல்ல பார்மில் இருந்தால், உலகில் அவரைவிட சிறந்த பந்து வீச்சாளர் வேறு எவரும் இருக்க முடியாது. அதிலும்முக்கியமாக புதிய பந்தில் ஸ்டாக் அபாரமாக வீசக்கூடியவர். பெர்த் ஆடுகளம் அவருக்கு உகந்ததாக இருக்கும். நான் கேள்விப்பட்ட வரையில் பெர்த் ஆடுகளம் உண்மையிலேயே வேகமானது. இதனால் அந்த ஆடுகளம் ஸ்டார்க்குக்கு உதவியாக இருக்கும்.

அடிலெய்டு டெஸ்டில் மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் தீப்பொறியெல்லாம் பறக்க வில்லை.

நீண்ட நாட்களாகவே ஸ்டார்க்கின் சிறந்த பந்து வீச்சுக்கும் மோசமான பந்து வீச்சுக்கும் இடையே நிறைய இடைவெளி உள்ளது.

மேலும், நான் பார்த்த வரையில், அவர் உண்மையில் சிறந்த ஃபார்மில்தான் இருக்கிறாரா என்ற எண்ணம் என் மனதில் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. அவர் சிறந்த பார்மில் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

இவ்வாறு பெய்ன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x