Published : 20 Dec 2018 11:25 AM
Last Updated : 20 Dec 2018 11:25 AM

கோலியுடன் செல்ஃபி- கோடீஸ்வரரான 16 வயது வீரரின் கனவு

ஐபிஎல் ஏலத்தில் ரூ.1.5 கோடிக்கு ஏலம் போன மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளம் வீரர் பிரயாஸ் ராய் பர்மன், 'கோலியுடன் ஒரு செல்ஃபி எடுக்கவேண்டும் என்பதே எனது கனவு' என்று தெரிவித்துள்ளார்.

 

2019-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை அன்று, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்க 14 நாடுகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.

 

ஏலத்தில் கலந்துகொள்ள அதில் இருந்து 346 வீரர்களை ஐபிஎல் நிர்வாகம் தேர்வு செய்திருந்தது. ஏறக்குறைய 8 ஐபிஎல் அணிகளில் 70-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கான இடங்கள் காலியாக இருந்ததால், ஏலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏலத்தின் முடிவில் மொத்தம் 60 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர்.  இதில் 40 இந்திய வீரர்களும் 20 வெளிநாட்டு வீரர்களும் அடக்கம். இதற்காக சுமார் ரூ.106 கோடிக்கும் மேல் செலவழிக்கப்பட்டது.

 

இந்த ஏலத்தில் ஐபிஎல் ஏலத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரயாஸ் ராய் பர்மன் ரூ.1.5 கோடிக்கு ஏலம் போனார். இவரை பெங்களூருவின் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

 

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பர்மன், 2002-ம் ஆண்டு பிறந்தவர். 16 வயதுக்கு உட்பட்டோருக்கான மேற்கு வங்க அணியில் விளையாடிய பர்மன், விஜய் ஹசாரே போட்டியில் விளையாடி எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தார். இதைக் குறிப்பிட்ட ராயல் சேலஞ்சர்ஸ் அணி, யாரும் எதிர்பாராத விதமாக அவரை ரூ.1.5 கோடிக்கு ஏலம் எடுத்தது.

 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பர்மன், ''அனைத்து இந்திய இளம் வீரர்களைப் போல கோலிதான் என்னுடைய ரோல் மாடல். எப்போதுமே அவருடன் ஒரு செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டிருக்கிறேன். அதற்காக முயற்சித்தும் இருக்கிறேன். ஆனால் இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

 

இப்போது ஐபிஎல் போட்டிகளின்போது ஓய்வறையை என்னுடைய ஹீரோவோடு பகிர்ந்துகொள்வேன் என்பதை இன்னும் நம்ப முடியவில்லை'' என்றார் பர்மன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x