

பெர்த்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், இந்தியக் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதையடுத்து, நடுவர்கள் எச்சரித்து அனுப்பினார்கள்.
ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் போட்டி என்றாலே களத்தில் 'ஸ்லெட்ஜிங்', 'சீண்டல்கள்', 'கிண்டல்களுக்குக்' குறை இருக்காது. ஆனால், பந்தை சேதப்படுத்தும் விவகாரத்துக்குப் பின், அவமானப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் அடிலெய்டு டெஸ்டில் ஒழுக்கம் காத்தனர்.
ஆனால் தங்களின் இயல்பான பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் பெர்த் டெஸ்ட் போட்டியில் மீண்டும் இயல்புக்குத் திரும்பினார்கள்.
பெர்த்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் 3-வது நாளான நேற்று இந்தியக் கேப்டன் விராட் கோலிக்கும், ஆஸி. கேப்டன் பெய்னுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆட்ட நேர முடிவில் பும்ரா வீசிய பந்தை பெய்ன் எதிர்கொண்டார். அப்போது அவரின் பேட்டின் அருகே பந்து சென்று ரிஷப் பந்த் கைகளில் தஞ்சம் புகுந்தது.
உடனே கேப்டன் கோலி, ரிஷப்பந்த், பும்ரா அனைவரும் நடுவரிடம் சத்தமாக அப்பீல் செய்தனர். ஆனால் நடுவர் தர்மசேனா அவுட் வழங்கவில்லை. அப்போது பெய்னும், கோலியும் ஒருவருக்கு ஒருவர் காட்டமாக பேசிக்கொண்டனர்.
"நீ ஆட்டமிழந்துவிட்டால், தொடர் 2-0 என்று வென்றுவிடுவோம்" என்று கோலி தெரிவித்தார். அதற்கு பெய்ன் "வேண்டுமென்றால் முதலில் நீங்கள் பேட் செய்திருக்கலாமே, தலைக்கனம் பிடித்தவனே" என்று பதில் அளித்தார். இதனால் இருவரும் அருகருகே சென்றபோது சக வீரர்கள் சத்தமிட்டதால் ஒதுங்கிச் சென்றனர். இதைப்பார்த்த ரசிகர்களும் சத்தமிட்டு ஆரவாரம் செய்தனர்.
இதே சூழல் இன்றும் நீடித்தது. பும்ரா 71-வது ஓவரை வீசினார். அப்போது பீல்டர்களை பெய்னுக்கு அருகே நிற்குமாறு விராட் கோலி மாற்றி அமைத்தார். இதைப் பார்த்த பெய்ன், விராட் கோலியிடம் ஏதோ கூற இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
நீ தானே பொறுமை இழந்து நேற்று பேசினாய், இன்று கூல்லாக இருக்க முயற்சி செய் என்று கோலியிடம் பெய்ன் கூறினார்.
அதற்கு பதில் அளித்த கோலி, "வா வந்து பேட் செய், நீ தானே கேப்டன், டிம் நீ தானே கேப்டன்" என்று கூறிக்கொண்டு அருகே சென்றார். அப்போது இரு கேப்டனும் மார்போடு உரசிக் கொள்ளும் வகையில் நெருக்கமாக நின்று பேசினார்கள்.
இதைப் பார்த்த நடுவர் கஃபானே, "போதும், போதும் இரு கேப்டனும் கலைந்து செல்லுங்கள். உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன்" எனத் தெரிவித்தார்.
அதற்கு பெய்ன், “ நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். வாக்குவாதம் செய்யவில்லை. கூலாக இருங்கள் விராட்” என்று கிண்டலாகத் தெரிவித்தார். ஆனால், கோலி ஏதோ சொல்லிக்கொண்டு செல்ல, ஸ்டெம்பில் இருந்த மைக்ரோ போனில் அது பதிவாகவில்லை.
இரு பந்துகள் வீசப்பட்ட நிலையில், பீல்டிங் செய்ய பெய்ன் அருகே கோலி வந்தபோது, இருவரும் மீண்டும் மார்போடு உரசுமாறு நின்றனர். அப்போது களநடுவர் தர்மசேனா இருவரையும் எச்சரித்து அனுப்பினார்.
இரு கேப்டன்களின் செயல்பாடுகளையும் பார்த்த ரசிகர்கள் கோஷமிட்டு தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். இதனால், சற்றுநேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.
இதுகுறித்து ஆஸி. முன்னாள் வீரர் மைக் ஹசி வர்ணனையில் பேசுகையில், “ கோலி கட்டுப்பாட்டை இழந்து செயல்படுகிறார். இதுபோன்ற செயலை இப்போது நான் விரும்பவில்லை.” என்றார்.
முன்னாள் கேப்டன் ஆலன்பார்டர் கூறுகையில் "இரு கேப்டன்களிடமும் இதுபோன்ற செயலை எதிர்பார்க்கவில்லை" எனத் தெரிவித்தார்.
முன்னாள் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனையில் பேசுகையில், "விராட் கோலி தனது கோபத்தை குறைத்துக்கொண்டு விளையாடுவது அவசியம்" எனத் தெரிவித்தார். அதற்கு ஆஸி. முன்னாள் கேப்டன்கள் ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க் ஆகியோர் கூறுகையில் "இரு கேப்டன்களும் தங்களின் எல்லை மீறாமல் இருக்கிறார்கள் ஆதலால் பயப்படத் தேவையில்லை" என்று தெரிவித்தனர்.