

செயிண்ட் கிட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3வதும், இறுதியுமான ஒரு நாள் போட்டியில் மேற்கிந்திய அணியின் பேட்டிங் வங்கதேசத்தை மூழ்கடித்தது.
முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்கள் விளாச, வங்கதேசம் 247 ரன்களை மட்டுமே எடுத்து படுதோல்வி தழுவியது. இதன் மூலம் 3 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வி அடைந்தது வங்கதேசம்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தினேஷ் ராம்தின், டேரன் பிராவோ இணைந்து 3வது விக்கெட்டுக்காக 258 ரன்கள் சேர்த்தது. புதிய ஒருநாள் சாதனையாகும்.
இதற்கு முன்னர் தென் ஆப்பிரிக்க ஜோடி ஹஷிம் ஆம்லா, ஏ.பி.டிவிலியர்ஸ் பாகிஸ்தானுக்கு எதிராக 3வது விக்கெட்டுக்காகச் சேர்த்த 238 ரன்களே உலக சாதனையாக இருந்தது.
தினேஷ் ராம்தின் 11 சிக்சர்களையும் 8 பவுண்டரிகளையும் விளாசினார். மொத்தம் 121 பந்துகளில் அவர் 169 ரன்கள் எடுக்க, டேரன் பிராவோ 127 பந்துகளில் 8 சிக்சர்கள் 7 பவுண்டரிகளுடன் 124 ரன்கள் எடுத்தார். இருவரும் இணைந்து 19 சிக்சர்களை அடித்தது ஒரு இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி அடிக்கும் அதிகபட்ச சிக்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
துவக்கத்தில் லெண்டில் சிம்மன்ஸ், கிறிஸ் கெய்ல் விரைவில் பெவிலியன் திரும்ப 12/2 என்று ஆனது. அதன் பிறகு டேரன் பிராவோ, தினேஷ் ராம்தின் மட்டைகளைக் கடந்து சென்ற பந்துகள் மிக மிகக் குறைவு.
மட்டையான ஆட்டக்களத்தில் வங்கதேச ஸ்பின்னர்கள் ஷாட்டாக வீச, வேகப்பந்து வீச்சாளர்களின் பந்தில் எந்த வித தாக்கமும் இல்லை. ஆட்டத்தின் 19வது ஓவரில் 10 ரன்கள் எடுத்து அதிரடி துவங்கியது. 22வது ஓவரில் 19 ரன்கள் விளாசப்பட்டது.
மஷ்ரபே மோர்டசா வீசிய 38வது ஓவரில் ராம்தின் 3 சிக்சர்களை விளாசினார். சதம் கடந்தார். உடனேயே டேரன் பிராவோவும் சதம் கண்டார். வங்கதேசத்தின் பீல்டிங்கிலும் தவறுகள் நிகழ்ந்தது. முஷ்பிகுர் ரஹிம், பிராவோ 10 ரன்களில் இருந்தபோது ஸ்டம்பிங்கைக் கோட்டை விட்டார். ராம்தின் 35 ரன்களில் இருந்தபோது மோர்டசா பந்தில் அப்துர் ரசாக் ஒரு கேட்சைக் கோட்டைவிட்டார்.
அதன் பிறகு 338 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் எடுத்தது. தொடர்ந்து ஆடிய வங்கதேசம் அனாமுல் ஹக் இம்ருல் கயேஸ் விக்கெட்களை இழந்து 2/2 என்று சரிவுமுகம் காட்டியது. தமிம் இக்பால் (55) கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் (72) ஆகியோர் 3வது விக்கெட்டுக்காக சாதுரியமான பேட்டிங் மூலம் 99 ரன்களைச் சேர்த்தனர். மற்றவர்கள் சோபிக்கவில்லை. மஹ்முதுல்லா, நாசிர் ஹுசைன், சோகாக் காஜி ஆகியோர் 20 ரன்களுக்கும் மேல் கடந்தாலும் வங்கதேசம் வெற்றிக்கு மிக தொலைவில் இருந்தது.
50 ஓவர்களில் 247/8 என்று தோல்வி கண்டது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரவி ராம்பால் 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தினேஷ் ராம்தின் தேர்வு செய்யப்பட்டார்.