

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் ஏ.பி.டிவிலியர்ஸைப் பின்னுக்குத் தள்ளி சங்கக்காரா முதலிடம் பிடித்துள்ளார்.
கால்லே டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் எடுத்த 211 ரன்கள் அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களிப்பாக அமைந்தது. இது 2014ஆம் ஆண்டில் அவரது 4வது சதமாகும்.
இதுவரை இந்த ஆண்டில் அவர் 1350 ரன்களை 84.37 என்ற சராசரியில் எடுத்துள்ளார். வங்கதேசத்திற்கு எதிராக ஒரு முச்சதம் மற்றும் ஒரு சதம் எடுத்ததோடு லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக அபாரமான முறையில் 147 ரன்களை எடுத்தார் சங்கக்காரா.
2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிவிலியர்ஸ் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் வகித்து வந்தார். இப்போது 2வது இடத்திற்குச் சென்றுள்ளார். ஹஷிம் ஆம்லா 3ஆம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 4ஆம் இடத்திலும் உள்ளனர். இலங்கை கேப்டன் ஆஞ்சேலோ மேத்யூஸ் 5வது இடத்திற்குத் தாவியுள்ளார்.
இந்திய பேட்ஸ்மென்களில் புஜாரா டாப் 10-லிருந்து பின்னடைவு கண்டு 12வது இடத்தில் உள்ளார். ஆனால் இந்திய பேட்ஸ்மென்களில் இவருக்குத்தான் அதிகபட்ச இடம் கிடைத்துள்ளது.
தொடர்ந்து சொதப்பி வரும் விராட் கோலி 5 இடங்கள் சரிந்து 20வது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் டாப் டெஸ்ட் பேட்ஸ்மென்கள் வருமாறு:
சங்கக்காரா, டிவிலியர்ஸ், ஆம்லா, டேவிட் வார்னர், ஆஞ்சேலோ மேத்யூஸ், ஷிவ் நாராயண் சந்தர்பால், மைக்கேல் கிளார்க், மிஸ்பா உல் ஹக், ராஸ் டெய்லர், யூனுஸ் கான்.