Published : 02 Dec 2018 03:38 PM
Last Updated : 02 Dec 2018 03:38 PM

128 ஆண்டுகள் வரலாற்றுச் சாதனையுடன் வங்கதேசம் வெற்றி: மெஹதின் மாயாஜாலத்தில் மே.இ.தீவுகள் இன்னிங்ஸ் தோல்வி

மெகஹி ஹசனின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், டாக்காவில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி இன்னிங்ஸ் மற்றும் 184 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.

டெஸ்ட் போட்டி தொடங்கிய 3-வது நாளிலேயே போட்டியின் முடிவு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வங்கதேசத்தின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே எதிரணியை பாலோ-ஆன் வாங்கச் செய்து பேட் செய்யக்கூறியது இதுதான் முதல்முறையாகும். இதன்மூலம் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி வங்கேதேச அணி வரலாற்று வெற்றி பெற்றது.

அந்த அணியில் சிறப்பாகப் பந்துவீசிய சுழற்பந்துவீச்சாளர் மெஹதி ஹசன் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்றார். சஹிப் அல்ஹசன் தொடர் நாயகன் விருது பெற்றார்.

மேற்கிந்தியத்தீவுகள் அணி வங்கேதேசத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்து வந்தது.

டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட் செய்தது. முதல் இன்னிங்ஸில் மஹமத்துல்லாவின் சதம்(136), சஹிப் அல்ஹசன்(80) பொறுப்பான ஆட்டத்தால் 508 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. மேற்கிந்தியத்தீவுகள் தரப்பில் வாரிகன், பிஷு, பிராத்வெய்ட், ரோச் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

தொடர்ந்து ஆடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி நேற்றைய 2-ம் நாள் ஆட்டநேரமுடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் சேர்த்திருந்து. 3-வது நாளா இன்று காலை ஆட்டத்தைத் தொடங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணி ஒரு மணிநேரத்தில் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் 36ரன்களுக்கு இழந்து முதல் இன்னிங்ஸில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

வங்கதேச அணியின் சுழற்பந்துவீச்சாளர் மெஹதி ஹசனின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 36.4 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதுமட்டுமல்லாமல் மேற்கிந்தியத்தீவுகள் அணயின் முதல் 5 பேட்ஸ்மேன்கள் கிளீன்போல்ட் முறையில் ஆட்டமிழந்திருந்தனர்.

128 ஆண்டு வரலாறு

128 கால கிரிக்கெட் வரலாற்றில் ஒருஅணியின் முதல் 5 பேட்ஸ்மேன்கள் “கிளீன்போல்ட்” ஆவது அரிதானதாகும். இதற்கு முன் இருமுறை மட்டும் இந்த நிகழ்வு கிரிக்கெட்டில் நடந்திருக்கிறது.

கடந்த 1890-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியும், 1879-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்குஎதிராக இங்கிலாந்து அணியும் மட்டுமே டாப் 5 பேட்ஸ்மேன்கள் போல்டாகிய நிகழ்வு நடந்துள்ளது.

அதன்பின் 128 ஆண்டுகளுக்குப்பின் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்களை வங்கதேச வீரர்கள் “போல்டாக்கி” வரலாற்றுச் சாதனை படைத்தனர்.

முதல் இன்னிங்ஸில் வங்கதேச சுழற்பந்துவீச்சாளர் மெஹதி ஹசன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார், சஹிப் அல்ஹசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 397 ரன்கள் பின்தங்கிய நிலையில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 2-வது இன்னிங்ஸை இன்று தொடர்ந்து ஆடியது. இந்த முறையும் மெஹதி ஹசனின் சுழற்பந்துவீச்சுக்கு மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பேட்ஸ்மேன்கள் இலக்கானார்கள். டாப் 5 பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஒரேநாளில் 15 விக்கெட்

குறிப்பாக மெஹதி ஹசனின் பந்துவீச்சில் கெய்ரன் பாவெல் 2-வது முறையாகவும், இந்த தொடரில் 3-வது முறையாக சஹிப் அல்ஹசனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

2-வது இன்னிங்ஸில் மேற்கிந்தியத்தீவுகள் தரப்பில் ஹெட்மெயர் மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து பேட் செய்து 92 ரன்கள் சேர்த்தார். இதில் 9 சிக்ஸர்கள் அடங்கும். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

2-வது இன்னிங்ஸில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 59.2 ஓவர்களில் 213 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது. ஏறக்குறைய ஒரேநாளில் 15 விக்கெட்டுகளை மேற்கிந்தியத்தீவுகள் அணி பறிகொடுத்துள்ளது.

இதையடுத்து ஒரு இன்னிங்ஸ் 184 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணி வென்றது. வங்கதேசம் தரப்பில் மெஹதி ஹசன் 5 விக்கெட்டுகளையும், தஜுஇஸ்லாம் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x