

பாக்சிங் டே டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ம் தேதி தொடங்குகிறது. இதில் இந்திய தொடக்க வீரர்கள் யார் என்பது ரவிசாஸ்திரிக்கும், விராட் கோலிக்கும் ஒரு பெரிய சவாலான விஷயமாகும்.
முரளி விஜய், கே.எல்.ராகுல் இருவரையும் வெளியே அனுப்ப வேண்டியதுதான் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். பிரித்வி ஷா காயமடைந்து தொடர் முழுதும் ஆட முடியாமல் போனது விஜய்க்கு அதிர்ஷ்டமா துரதிர்ஷ்டமா என்பது மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் தெரிய வரும்.
இந்நிலையில் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் சஞ்சய் மஞ்சுரேக்கர் எழுதிய பத்தியில் இது பற்றி கூறியிருப்பதாவது:
கே.எல்.ராகுல் முற்றிலும் தன்னை இழந்து விட்டார். நம்பிக்கை இழந்து விட்டார், அவருக்கு இடைவெளி கொடுப்பதுதான் இப்போதைக்கு நல்லது. அவருக்காக நாம் வருத்தம்தான் பட முடியும்.
பிரித்வி ஷா காயம் விஜய்யின் அதிர்ஷ்டம். லயனிடம் மோசமான ஷாட்டில் விஜய் பெர்த்தில் அவுட் ஆனார். முன்னதாக 20 ரன்களை எடுக்கும் போது நம்பிக்கையுடனேயே ஆடினார்.
உள்நாட்டு கிரிக்கெட்டில் மலைபோல் ரன்களைக் குவித்த மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டியதுதான் என்பது பலரது பரவலான கருத்து. ஆஸ்திரேலிய பிட்ச்களில், கடினமான கூகபரா பந்தில் ஒரு இளம் திறமையை நாம் எக்ஸ்போஸ் செய்யலாமா என்பதுதான் என் கேள்வி. அதுவும் அவருக்கு பயிற்சி ஆட்டங்களும் முன்னதாக இல்லை. இந்திய அணியின் நீண்ட கால வரலாற்றில் ஆஸ்திரேலியாவில் அறிமுகம் ஆகும் பேட்ஸ்மென்கள் அரிதே.
ஹனுமா விஹாரி தன் 2 அயல்நாட்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஓரளவுக்கு நன்றாகவே ஆடியுள்ளார், அவர் ஆட்டத்தைப் பார்க்கும் போது 1 அல்லது 2ம் நிலையில் இறங்கத் தகுதியானவர் போல் தெரிகிறது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களை இந்தியா தொடக்க வீரர்களாக முன்னர் களமிறக்கியுள்ளனர், விரேந்திர சேவாக் ஒரு முன்னுதாரணம். அதே போல் ஹனுமா விஹாரியை முயற்சி செய்யலாம்.
மயங்க் அகர்வாலுக்கு நிறைய வலையில் பந்துகளை வீசி அவரை ஆஸ்திரேலிய பிட்ச்களுக்குத் தயார் படுத்திய பிறகு கடைசி டெஸ்ட் போட்டியில் எடுக்கலாம். இந்திய பிட்ச்சாக இருந்தால் நேரடியாக இறங்க வைக்கலாம், ஆனால் இங்கு கொஞ்சம் யோசிக்க வேண்டியதாக உள்ளது.
பெர்த் போல் அல்லாமல் அணித்தேர்வில் கொஞ்சம் வலுவாக யோசித்துக் களமிறங்கினால் இந்திய அணி மெல்போர்ன் டெஸ்ட்டில் வென்று தொடரில் மீட்சியடைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு கூறிய மஞ்சுரேக்கர், தனது பிளேயிங் லெவனையும் குறிப்பிட்டுள்ளார்:
முரளி விஜய், ஹனுமா விஹாரி, புஜாரா, கோலி, ரஹானே, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, பும்ரா, மொகமத் ஷமி