

பிரிஸ்பனில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் மழைக் குறுக்கீட்டால் ஆட்டம் 17 ஓவர்கள் போட்டியாகக் குறைக்கப்பட ஆஸ்திரேலியா 17 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சற்று முன் வரை 3.1 ஓவர்களில் 31 ரன்கள் என்ற நல்ல தொடக்கம் கண்டுள்ளது.
முன்னதாக டாஸ் வென்ற விராட் கோலி முதலில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்தார். டி ஆர்க்கி ஷார்ட் 7 ரன்களில் குல்தீப் யாதவ்வின் அருமையான கேட்சுக்கு கலீல் அகமெடிடம் வெளியேறினார்.
இந்நிலையில் 4வது ஓவரில் ஏரோன் பிஞ்ச் , பும்ரா வீச்சில் அடித்த பந்து ஷார்ட் கவரில் கேட்சாக கோலியிடம் வந்தது. கோலி தயாராக இல்லையா என்பது தெரியவில்லை கேட்ச் கையிலிருந்து நழுவியது. பிறகு ஒரு மிஸ்பீல்டும் செய்தார், அதேபோல் அடித்து நொறுக்கிய மேக்ஸ்வெலை ரன் அவுட் செய்ய கிடைத்த வாய்ப்பில் ஷார்ட் மிட்விக்கெட்டில் இருந்த கோலி ஸ்டம்புக்கு வரவில்லை. இவையெல்லாம் இது என்ன வழக்கமான கோலிதானா என்று ரசிகர்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்த ட்விட்டரில் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
எரோன் பிஞ்ச் கோலி விட்ட கேட்ச் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தவில்லை, அவர் 27 ரன்களில் குல்தீப் யாதவ்விடம் வெளியேறினார். அதன் பிறகு கிறிஸ் லின் இறங்கி ஒரு காட்டு காட்டினார், கலீல் அகமெட்டை ஒரே ஒவரில் 3 சிக்சர்களுடன் 21 ரன்கள் விளாசி 20 பந்துகளில் 1 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 37 ரன்கள் எடுத்து இவரும் குல்தீப் பந்தில் வெளியேறினார், அப்போது 10 ஓவர்களில் 75/3 என்று இருந்தது ஆஸ்திரேலியா.
ஆனால் அதன் பிறகு கிளென் மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் இணைந்து 6 ஓவர்களில் 78 ரன்களை ஓவருக்கு 13 ரன்கள் என்ற வீதத்தில் விளாசித்தள்ளினர். அப்போது மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டது, மீண்டும் துவங்கிய போது 17 ஒவர்களகாகக் குறைக்கப்பட ஆஸ்திரேலியாவுக்கு 5 பந்துகள்தான் மீதமிருந்தன, 158/4 என்று முடிந்தது, மேக்ஸ்வெல் 24 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 46 என்ற ஸ்கோரில் பும்ராவிடம் ஆட்டமிழந்தார். ஸ்டாய்னிஸ் 33 நாட் அவுட்.
குருணால் பாண்டியா 4 ஓவர்களில் 55 ரன்களை விட்டுக் கொடுத்தார், இவர் மட்டுமே 6சிக்சர்களை வாரி வழங்கினார். 5 டாட்பால்களே வீசினார். ஹர்திக் பாண்டியா பரவாயில்லை என்று இப்போது நினைப்பார்கள். இந்தியாவுக்கு 17 ஓவர்களில் 174 ரன்கள் இலக்கு.