Published : 05 Nov 2018 05:09 PM
Last Updated : 05 Nov 2018 05:09 PM

இந்தியா வென்றிருக்கலாம் ஆனால் பிசிசிஐ தோற்றது; மணியடித்துத் தொடங்கிய அசாருதீன் மீது கம்பீர் விளாசல்

டெல்லி கிரிக்கெட் அணியின் கேப்டன்சி பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் இனி தன்னை கேப்டன்சி பொறுப்புக்கு பரிசீலிக்க வேண்டாம் என்றும் டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்கு தெரிவித்த கவுதம் கம்பீர், தனது இன்னொரு ட்வீட்டில் ஊழலுக்கு எதிராக விமர்சனம் வைத்துள்ளார்.

நேற்று இந்தியா, மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி நடைபெற்றது, இந்த ஆட்டத்தை முன்னாள் இந்திய கேப்டன் அசாருதீன் மணி அடித்துத் தொடங்கி வைத்தார்.  இது நேற்று செய்தியானது.

அசாருதீன் 1999-2000 தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக எழுந்த கிரிகெட் சூதாட்டச் சர்ச்சையில் சிக்கி தடை விதிக்கப்பட்டவர். அதன் பிறகு காங்கிரஸில் சேர்ந்து எம்.பியு.மானார். அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடையை ஆந்திரா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

 

ஆனால் கவுதம் கம்பீருக்கு இது மனம் ஒப்பவில்லை போலும், அவர் அசாருதீன் நேற்று மணியடித்து ஆட்டத்தை தொடங்கி வைக்கும் படத்தை வெளியிட்டு தன் ட்விட்டர் பதிவில்,

“இந்தியா ஈடன் கார்டன்சில் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் மன்னிக்கவும்... பிசிசிஐ, சிஓஏ (கிரிக்கெட் நிர்வாகக் குழு), சிஏபி (பெங்கால் கிரிக்கெட் சங்கம்) தோற்றுவிட்டது.

ஊழலைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது என்ற கொள்கை ஞாயிறன்று விடுமுறை எடுத்துக் கொண்டு விட்டது போலும். ஹெச்.சி.ஏ. தேர்தல்களில் அவரை (அசாரை) போட்டியிட அனுமதித்தனர் என்பது எனக்குத் தெரியும், ஆனால் இப்போது இது அதிர்ச்சிகரமானது.. (அதாவது சூதாட்டத்தில் சிக்கி வாழ்நாள் தடை பெற்ற அசாருதீனை மணியடித்து போட்டியைத் தொடங்க வைப்பது), ஆம் மணி ஒலிக்கிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள் கேட்கட்டும்” என்று கம்பீர் தன் ட்விட்டரில் விளாசினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x