

மெல்போர்னில் நடைபெற்ற 2வது டி20 போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது, ஆஸி. அணி 132 ரன்களை 19 ஒவர்களில் எடுத்த பிறகு தொடர் மழையால் இந்திய இன்னிங்ஸ் நடைபெறவில்லை.
மெல்போர்னில் நடைபெறும் 2வது டி20 போட்டியில் இந்திய அணி சிலபல கேட்ச்களை விட்டாலும் ஆஸ்திரேலிய அணியை 19 ஓவர்களில் 132 என்று கட்டுப்படுத்தியது, அதாவது 62/5 என்ற நிலையிலிருந்து பிடியை நழுவ விட்டாலும் 19 ஓவர் 132 ரன்கள் என்பது கட்டுப்படுத்தப்பட்ட ரன்கள்தான்
ஆனால் ஆட்டம் தொடர் மழை காரணமாக முதலில் 9 ஓவர்களில் 90 ரன்கள் என்றும் பிறகு 5 ஓவர்களில் 46 என்றும் நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் மழை விடுவதாக இல்லை என்பதால் ஆட்டம் கைவிடப்பட்டது. ஆஸதிரேலியா 1-0 முன்னிலையுடன் சிட்னிக்குச் செல்கிறது முடிவு ஆட்டம், இதனால் இந்திய அணி தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்தது. தொடரை சமன் செய்ய வாய்ப்பு உள்ளது.
கலீல் அகமெட் தொடக்கத்தில் நன்றாக வீசினார் 3 ஒவர்களி 21 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், பவர் பிளேவுக்குள்ளேயே அவர் கிறிஸ் லின் விக்கெட்டைக் கைப்பற்றி கடந்த போட்டியில் இவரிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டதற்கு பழிதீர்த்துக் கொண்டார். பந்தை பிடித்து மெதுவாக விட்டார் இதனால் டீப் பாயிண்டில் பாண்டியாவின் நல்ல கேட்சுக்கு லின் வெளியேறினார். ஆனால் டி ஆர்க்கி ஷார்ட் வேலியில் போன ஓணானை இழுத்து உள்ளே விட்டது போல் கலீல் பந்தில் பவுல்டு ஆனார்.
கலீலை அப்போதே 4 ஓவர்கள் கொடுத்து முடித்திருக்க வேண்டும். டெத் ஓவர்களில் அவரைக் கொண்டு வரக்கூடாது, ஏனெனில் அவருக்கு அனுபவம் இன்னும் போதவில்லை அப்படியிருக்கும் போது அவரை பாதுகாக்க வேண்டும், முக்கியக் கட்டங்களில் அவரை ‘எக்ஸ்போஸ்’ செய்யக்கூடாது, இதுதான் ஒரு வீரரைக் காப்பது என்பதன் அர்த்தம், அவர் மோசமாக ஆடும்போது அவரை அணியில் தக்க வைப்பது வீரரை பாதுகாப்பதாகாது.
இந்நிலையில் 18வது ஓவரை வீச வந்தார் கலீல் அகமெட் முதலில் பவுன்சரை வீசி வைடு ஆனது. அடுத்த 2 பந்துகளை டை பவுண்டரிக்கு அனுப்பினார். அடுத்த பந்தில் 2 ரன்கள், 5வது பந்தை டை ஒரு சுற்று சுற்றினார், மாட்டவில்லை, விக்கெட் கீப்பர் பந்த்திடம் பந்து செல்ல அவர் அதனை கால் வழியே விட்டார், இதனால் ஒரு ரன் ஆனது. இதனையடுத்து மெக்டர்மட் ஸ்ட்ரைக்கர் முனைக்கு வந்தார், பந்தை தவறாக லெந்தில் வீசினார் கலீல், மெக்டர்மட் அதனை டீப் மிட்விக்கெட்டுக்கு முறையாக சிக்சருக்கு அனுப்பி வைத்தார்.
அந்த 5வது பந்தில் ரிஷப் பந்த் ‘பை’ கொடுக்கவில்லை எனில் ஆண்ட்ரூ டை ஸ்ட்ரைக்கில் இருந்திருப்பார், அவரைக் கட்டுப்படுத்த வாய்ப்பிருந்தது, ஆனால் பை விட்டதால் சிக்ஸ் ஆனது. அந்த ஓவரில் 18 ரன்கள் வர அவர் அனாலிசிஸ் காலியானதோடு, மழையால் பாதிக்கப்படும் ஒரு ஆட்டத்தில் அந்த ஒரு சிக்ஸ் டக்வொர்த் கணக்கீட்டிலும் செல்வாக்கு செலுத்தும். சிறு சிறு விஷயங்கள் சில சமயங்களில் தோல்விக்குக் காரணமாகும். 18வது ஓவரை கோலி, புவனேஷ்வர் குமாருக்கு கொடுத்துப்பார்த்திருக்கலாம். கடைசி 5 ஒவர்களில் 49 ரன்கள் வந்துள்ளது.
ஆனால் ஆட்டம் தொடர் மழை காரணமாக இந்திய இன்னிங்ஸ் ஆடப்படாமல் கைவிடப்பட்டது , ஆஸி. அணி 1-0 என்று முன்னிலையுடன் சிட்னி செல்கிறது.