Published : 18 Nov 2018 04:34 PM
Last Updated : 18 Nov 2018 04:34 PM

‘ரோஹித் சர்மாவை தடுத்து நிறுத்த முடியாது’: மேக்ஸ்வெல் புகழாரம்

ரோஹித் சர்மா விளாசத் தொடங்கிவிட்டால், தடுத்து நிறுத்தவே முடியாது என்று ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி டி20 தொடர், 4 டெஸ்ட் போட்டிகள், ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. கடந்த தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்குப் பின் அணியில் இடம் பெறாமல் இருந்த ரோஹித் சர்மா மீண்டும் டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவின் இணையதளம் ஒன்றுக்கு இந்திய பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

''ரோஹித் சர்மா எந்த விஷயத்துக்கும் பெரிதாக சிரத்தை எடுத்துக்கொள்ளாத மிகவும் கூலான மனிதர். மற்ற வீரர்கள் களத்தில் நிலைப்பெற்றுக் கொள்வதைக் காட்டிலும் சிறிது நேரம் எடுத்துக்கொள்வார்.

எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் ரோஹித் சர்மாவின் பேட்டிங்கை நான் ரசித்துப் பார்ப்பேன். அவர் மட்டும் களத்தில் நிலைத்து நின்று ஆடத் தொடங்கிவிட்டால், அந்த ஆட்டமே இந்திய அணிக்கு எளிதாக மாறி, வெற்றி ஏறக்குறைய கைக்கு அருகே வந்துவிடும். ரோஹித் சர்மா தன்னை நோக்கி வரும் பந்துகளை அனைத்து திசைகளிலும் அடித்து விளாசக்கூடியவர்.

வேகப்பந்துவீச்சானாலும் சரி, சுழற்பந்துவீச்சானாலும் சரி எதையும் எளிமையாகச் சந்தித்து விளையாடக்கூடியவர் ரோஹித் சர்மா, எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் சிக்ஸர் அடித்து பந்தைப் பறக்கவிடுவார். உண்மையில் ரோஹித் சர்மா முழுமையான நட்சத்திர வீரர். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதங்கள் பல அடித்தவர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 264 ரன்கள் சேர்த்து ரோஹித் சர்மா சாதனையாளராக இருக்கிறார். அவர் அடித்து விளையாடத் தொடங்கிவிட்டால், ஆஸ்திரேலிய வீரர்கள் கூட தடுக்க முடியாது.

கேப்டன் பொறுப்பேற்று ரோஹித் சர்மா செயல்படும்போது, நெருக்கடியான நேரங்களில், மிகவும் கூலாகச் செயல்படுவது ரோஹித்தின் முக்கியமான வலிமையான விஷயங்களில் ஒன்றாகும்.

ரோஹித் சர்மா பேட்டிங் செய்யும் முறை மிகவும் கூலாக, அதிகமான சிரத்தை எடுக்காமல் இருக்கும். அவரின் கவனத்தை ஏதும் திசை திருப்ப முடியாது. எனக்குத் தெரிந்தவரை அதுதான் அவரின் மிகப்பெரிய வலிமையாக இருக்கும்''.

இவ்வாறு மேக்ஸ்வெல் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x