Published : 22 Nov 2018 10:21 AM
Last Updated : 22 Nov 2018 10:21 AM

விராட் கோலியின் உலக சாதனையை முறியடித்து ஷிகர் தவண் புதிய மைல்கல்

டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்த உலக  சாதனையை ஷிகர் தவண் முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, டெஸ்ட், ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதலாவது டி20 போட்டி பிரிஸ்பேன் நகரில் நேற்று நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 4 ரன்களில் வெற்றி பெற்றது.

டி20 போட்டிகளில் ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய 3 பேரும் இந்த ஆண்டில் சூப்பர் பேட்டிங் ஃபார்மில் இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஷிகர் தவண் இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் 15 ஆட்டங்களில் விளையாடி 572 ரன்கள் சேர்த்து அதிகமான ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

ஆனால், டி20 போட்டியில் ஒரு ஆண்டில் அதிகபட்சமாக ரன்கள் சேர்த்ததில் கேப்டன் விராட் கோலியின் சாதனையை எந்த வீரரும் முறியடிக்கவில்லை. கடந்த 2016-ம் ஆண்டு விராட் கோலி 641 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது ஷிகர் தவண் இந்த ஆண்டில் 572 ரன்கள் சேர்த்து விராட் கோலியின் சாதனையை நெருங்கியிருந்தார். கோலியின் சாதனையை முறியடிக்க தவணுக்கு இன்னும் 69 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடந்த முதலாவது டி20 போட்டியில் ஷிகர் தவண் 42 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஒரு ஆண்டில் அதிகபட்சமாக ரன் சேர்த்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை தக்கவைத்திருந்த கோலியின் சாதனையை ஷிகர் தவண் முறியடித்தார். தற்போது ஷிகர் தவண் 648 ரன்களுடன் முதலிடத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 5 போட்டிகளிலுமே ஷிகர் தவண் சரியாக விளையாடவில்லை. 4,29,35,38,6 ரன்களில் ஆட்டமிழந்தார். டி20 போட்டித் தொடரிலும் 3, 43,92 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2018-ம் ஆண்டில் டி20 போட்டிகளில் அதிகபட்சமாக ரன் சேர்த்தவர்கள் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் பக்கர் ஜமான்(576 ரன்கள்), ரோஹித் சர்மா(567 ரன்கள்), பாபர் ஆசம்(563 ரன்கள்) ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.

கோலியின் ரன்களை எட்டுவதற்கு இந்திய வீரர் ரோஹித் சர்மாவுக்கு இன்னும் 74 ரன்கள் தேவைப்படுகிறது.

மெல்போர்னில் நேற்று நடந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததன் மூலம் கடந்த 9 டி20 போட்டியில் சேஸிங்கில் தோற்ற முதலாவது போட்டி இதுவாகும். சிட்னியில் நாளை 2-வது டி20 போட்டி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x