

சி.கே. நாயுடு கோப்பை கிரிக் கெட்டில் புதுச்சேரி சுழல்பந்து வீரர் சிதாக் சிங் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இவர் தற்போது புதுச்சேரி அணிக்காக விளையாடி இச்சாதனையை படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சி.கே. நாயுடு கோப்பைக்கான 23 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான 4 நாள் கிரிக்கெட் போட்டி நாடு முழுவதும் நடந்து வருகிறது. இதில் புதுச்சேரி - மணிப்பூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற புதுச்சேரி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இப்போட்டியில் மணிப்பூர் அணி தொடக்கம் முதல் திணறியது. புதுச்சேரி அணியைச் சேர்ந்த இடது கை சுழல் பந்து வீச்சாளர் சிதாக் சிங் பந்து வீச்சில் மணிப்பூர் அணி விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தது.
ஒரு இன்னிங்சிஸ் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையை இவர் படைத்தார். இவர் 31 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதில் 7 ஓவர் மெய்டன் ஓவர் ஆகும். இதன்மூலம் மணிப்பூர் அணி 39.5 ஓவரில் எல்லா விக்கெட்களையும் இழந்து 71 ரன்னில் சுருண்டது.
19 வயதான சிதாக் சிங் தொடர்பாக விசாரித்தபோது, “அவர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் 15 வயதில் மும்பை அணியில் இடம் பெற்றார். சச்சினுக்கு பிறகு மும்பை அணியில் குறைந்த வயதில் இடம் பிடித்தவர். வெளிமாநில வீரர் என்ற அடிப்படையில் புதுச்சேரி அணியில் இடம்பிடித்து விளையாடி வருகிறார். ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் எடுத்துள்ள சிதாக் சிங்குக்கு நாடு முழுவதுமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது” என்று தெரிவிக்கின்றனர்.