

பிரிஸ்பேனில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி பந்துவீச அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதற்காக அந்த அணிக்கு அபராதம் விதித்துள்ளது ஐசிசி.
பிரிஸ்பேனில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி கடந்த புதன்கிழமை நடந்தது, மெல்பர்னில் நடந்த 2-வது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணிக்கு எதிராகப் பந்துவீச ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வழங்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தைக் காட்டிலும், அதிகமான நேரம் எடுத்துக்கொண்டது. இதையடுத்து, ஐசிசி உயர் நடுவர் ஜெஃப் குரோவ் ஆஸ்திரேலிய அணிக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ஐசிசி கிரிக்கெட் வீரர்கள் விதிமுறை 2.5.1.ன்படி குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்து வீசாமல், அதிகமான நேரம் எடுத்துக்கொண்டது குற்றமாகும். ஆதலால், போட்டி ஊதியத்தில் இருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் 10 சதவீதத்தை அபராதமாகச் செலுத்த வேண்டும். ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் 2 மடங்கு அபராதம் செலுத்த வேண்டும் என எச்சரிக்கிறோம்.
அடுத்து வரும் போட்டிகளில் தொடர்ந்து இதே தவற்றை ஆஸ்திரேலியக் கேப்டன் ஆரோன் பிஞ்ச் செய்தால், அவர் ஒரு போட்டிக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவார். இந்தக் குற்றத்தை கேப்டன் பிஞ்ச் ஒப்புக்கொண்டதால் விசாரணை ஏதும் தேவையில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள நடுவர்கள் சிமன் பிரே, பால் வில்சன், மூன்றாவது நடுவர் ஜெரார்ட் அபூட், 4-வது நடுவர் ஷான் கிரேக் ஆகியோரின் பரிந்துரையின் பெயரில் ஐசிசி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.