Published : 21 Aug 2014 02:49 PM
Last Updated : 21 Aug 2014 02:49 PM

34/5 என்ற சரிவிலிருந்து மீண்டு பொலார்ட் அதிரடியில் வென்றது வெஸ்ட் இண்டீஸ்

செயிண்ட் ஜார்ஜில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த வங்கதேசம் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்கள் எடுக்க. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட்டுகளை 34 ரன்களுக்கு இழந்தது. பிறகு பொலார்ட் மற்றும் தினேஷ் ராம்தின் அதிரடியில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

218 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி கெய்ல் (3), டேரன் பிராவோ (7), எட்வர்ட்ஸ் (10), சிம்மன்ஸ் (0), டிவைன் பிராவோ(5) ஆகியோரது விக்கெட்டுகளை பறிகொடுத்தது. வங்கதேசத் தரப்பில் இந்த 5 விக்கெட்டுகலில் அல் அமின் ஹுசைன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதன் பிறகு கெய்ரன் பொலார்ட் மற்றும் தினேஷ் ராம்தின் இணைந்தனர். 5 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 70 பந்துகளில் பொலார்ட் 89 ரன்களை விளாச, தினேஷ் ராம்தின் 76 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் 74 ரன்களை எடுத்தார்.

இருவரும் இணைந்து 132 பந்துகளில் 145 ரன்களைச் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் 39.4 ஓவர்களில் 219/7 என்று வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் வங்கதேசத்தை பேட் செய்ய அழைத்தது. அந்த அணியின் 21 வயது தொடக்க வீரர் அனாமுல் ஹக் 138 பந்துகளில் 109 ரன்களை எடுத்தார். இதில் 11 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். இது இவர் விளையாடு 20வது போட்டியாகும். அதில் 3வது சதம் எடுத்துள்ளார். இவர் இன்றைய கிரிக்கெட்டில் பயமில்லாமல் ஹுக் ஷாட் ஆடக்கூடியவர்.

தமிம் இக்பால் 26 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் சொதப்பினார். கேப்டன் டிவைன் பிராவோ 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல் 18 பந்துகளை எதிர்கொண்டு 3 ரன்களையே எடுத்தார். அல் அமின் ஹுசைன், மஹ்மதுல்லா, மஷ்ரபே மோர்டசா ஆகியோர் முதல் 5 விக்கெட்டுகளை சடுதியில் காலி செய்தனர்.

பொலார்ட் களமிறங்கி பந்துகளை ஸ்டாண்டிற்கு அனுப்பத் தொடங்க 39 பந்துகளில் அரைசதம் கடந்தார். 31வது ஓவரில் ராம்தினும் அரை சதம் எடுக்க வங்கதேசம் நம்பிக்கையை கைவிட்டது.

பொலார்ட், மஹமதுல்லாவின் அபாரமான கேட்சிற்கு அவுட் ஆக, 201/7 என்ற நிலையில் ஜேசன் ஹோல்டர் 15 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

ஆட்ட நாயகனாக பொலார்ட் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x