

நியூசிலாந்து ஏ அணியுடன் நாளைமறுநாள்(16-ம் தேதி) நடக்கும் அதிகாரப்பூர்மில்லாத டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய ஏ அணியில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரலேயாவுக்கு இந்த வாரத்தில் புறப்படும் இந்திய அணி அடுத்த வாரத்தில் இருந்து டி20 தொடரிலும், டிசம்பர் மாதத்தில் இருந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஜனவரியில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் விளையாட உள்ளது. இதில் 3 வகையான போட்டிகளிலும் ரோஹித் சர்மா இடம் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியா சென்று டி20 போட்டியில் விளையாடும் முன், இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்ற வீரர்களில் 6 பேர் நியூசிலாந்து செல்ல உள்ளனர். பிரித்வி ஷா, முரளி விஜய், ஹனுமா விஹாரி, பர்தீவ் படேல், ரஹானே, ரோஹித் சர்மா ஆகியோர் நியூசிலாந்து செல்கிறார்கள்.
நியூசிலாந்து ஏ அணியுடன் வரும் 16-ம் தேதி 4 நாட்கள் நடைபெறும் அதிகாரப்பூர்வமில்லாத டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணியில் இடம் பெற்று இந்த 6 வீரர்களும் விளையாடுகின்றனர். அதன்பின் நியூசிலாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் தொடர் தொடங்கும் முன் திரும்புவார்கள். முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது.
இதில் நியூசிலாந்து ஏ அணியுடன் விளையாடும் இந்திய ஏஅணியில் ரோஹித் சர்மாவும் இடம் பெற்று இருந்தார். ஆனால், மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான தொடரில் இருந்து தொடர்ந்து விளையாடிவருவதால், அவருக்கு ஓய்வு அளித்து பிசிசிஐ மருத்துவக் குழு அறிவித்துள்ளது.
இது குறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில், நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக 4 நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய ஏ அணியில் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டு இருந்தார். ஆனால், தொடர் போட்டிகளில் ரோஹித் சர்மா பங்கேற்றதால், அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதை பிசிசிஐ மருத்துவக்குழு அவரின் உடல்நிலையை ஆய்வுசெய்து இந்த முடிவை சீனியர் தேர்வுக்குழுவின் ஒப்புதல் பெற்று அறிவித்துள்ளது. இந்திய அணி வரும் 16-ம் தேதி ஆஸ்திரேலியப் பயணத்துக்காகப் புறப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், நியூசிலாந்து ஏஅணிக்கு எதிராக விளையாடும் இந்திய ஏ அணியில் இருந்துதான் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால், ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20, ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா இடம் பெறுவதில் எந்தவிதமான தடையும் இல்லை. ஆனால் டெஸ்ட்டில் லெவனில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.