Last Updated : 05 Nov, 2018 03:16 PM

 

Published : 05 Nov 2018 03:16 PM
Last Updated : 05 Nov 2018 03:16 PM

ஷிகர் தவண் ஸ்டம்புகளை 3வது முறையாகப் பறக்கவிட்ட ஒஷேன் தாமஸ் இன்னொரு ஜொயெல் கார்னர்? மைக்கேல் ஹோல்டிங்?

மே.இ.தீவுகளின் புதிய வேகப்புயல் ஒஷேன் தாமஸ் இப்போதே கிரிக்கெட் வல்லுநர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். நேற்று கொல்கத்தாவில் அவர் ரோஹித் சர்மா, ஷிகர் தவண் இருவரையும் வீழ்த்திய பந்துகள் மணிக்கு 147 கிமீ வேகம் கொண்டிருந்தது.

அதுமட்டுமல்ல அவர் மணிக்கு 150 கிமீ வேகம் வீசக்கூடியவர் என்றும் தெரிகிறது, இன்று ரபாடாவுக்குப் பிறகு அதிவேகப் பந்துவீச்சுக்கு வந்துள்ளவர் ஒஷேன் தாமஸ்.

21 வயதாகும் ஒஷேன் தாமஸ், அன்று ஒருநாள் தொடரில் நல்ல வேகம் காட்டி, ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலியை கூட திணறடித்தார், ஆனால் பிறகு லைன் லெந்த்தை இழந்து 10 ஓவர்களில் 80 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் அப்போதே தெரிந்தது இவர் ஒரு சிறப்புத் திறமை வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் என்பது.

நேற்று ரோஹித் சர்மாவுக்கு முதல் பந்திலேயே முன் விளிம்பில் பட்டது, பிறகு அசவுகரியமான லெந்தில் ஒரு பந்தை குத்தி எழுப்பினார், ரோஹித் சர்மா திணறினார். எப்படியோ பந்தை தரையில் ஆடினார். ஆனால் அதே ஓவரில் 6வது பந்து 147 கிமீ வெக இன்ஸ்விங்கராகி ரோஹித் சர்மா மட்டையின் உள்விளிம்பில் பட்டு ராம்தினிடம் கேட்ச் ஆனது, ரிவியூவில் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது, இந்தப் பந்து என்ன ஆனது என்று சத்தியமாக 3 இரட்டைச்சதம் அடித்தவருக்குப் புரியவில்லை.

அட! ஷிகர் தவண் ஸ்டம்ப் எங்கப்பா?

பிறகு ஷிகர் தவணுக்கு கனவுப்பந்தை வீசினார், மீண்டும் லெந்தில் பிட்ச் ஆகி சற்றே நேர் ஆனது பந்து தவணுக்கு ஒன்றும் புரியவில்லை. 147 கிமீ வேகம், தவண் ட்ரைவ் ஆடப் போனார், பேட்டுக்கும் கால்காப்புக்கும் இடையே இருசக்கர வாகனம் நுழையும் இடைவெளி பந்து உள்ளே புக ஸ்டம்ப் பறந்தது. உண்மையில் 3வது முறையாக 3 இன்னிங்ஸ்களில் ஷிகர் தவணின் ஸ்டம்புகள் ஒஷேன் தாமஸ் பந்தில் பறந்துள்ளன.

பிறகு மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக்கிற்கும் தன் அதிவேக பந்துகளினால் கடும் தொந்தரவுகளைக் கொடுத்தார் ஒஷேன் தாமஸ்.  ஒருகட்டத்தில் டி20 கிரிக்கெட்டில் ஷார்ட் லெக் பீல்டரை வைத்து வீசிய முதல் வேகப்பந்து வீச்சாளராக இருந்தார் தாமஸ். பொலார்டை ஷார்ட் லெக்கில் நிறுத்தினார் பிராத்வெய்ட், இது ஒரு நல்ல கேப்டன்சி, ஆனால் பலனளிக்கவில்லை. தினேஷ், பாண்டே பிழைத்தனர்

இந்நிலையில் நீண்ட காலத்துக்குப் பிறகு மே.இ.தீவுகளில் ராபர்ட்ஸ், ஹோல்டிங், மார்ஷல், கார்னர் தரநிலை பவுலர் ஒருவர் வந்துள்ளதாகவே பேச்சுகள் அடிபடத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் மே.இ.தீவுகள் கேப்டன் பிராத்வெய்ட் கூறியதாவது:

ஒஷேன் தாமசின் திட்டங்கள் என்னவென்று தெரியவில்லை அவரிடம் உரையாடல் மேற்கொண்டேன், அவர் நல்ல இடத்தில் இருக்கிறார், அவருக்குக் கிடைத்துள்ள, கிடைக்கப்போகும் வாய்ப்புகளை அவர் நன்றாகப் புரிந்து வைத்துள்ளார், அவர் இன்னும் உடற்தகுதி அளவில் சிறந்து விளங்கி வலுவாக வேண்டும், உலகம் இவரது காலடியில், வெஸ்ட் இண்டீஸ்தான் அவரை இன்னொரு ஜொயெல் கார்னராகவோ, மைக்கேல் ஹோல்டிங்காகவோ மாற்ற வேண்டும், உருவாக்க வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x