Published : 27 Nov 2018 01:13 PM
Last Updated : 27 Nov 2018 01:13 PM

மயங்க் அகர்வால் வாழ்க்கையில் மியூசிக்கல் சேர் விளையாடாதீர்கள்: தேர்வுக் குழு மீது கவுதம் கம்பீர் பாய்ச்சல்

நீங்கள் மியூக்கல் சேர் விளையாடுவதற்கு மயங்க் அகர்வால் போன்ற இளம் வீரர்களின் வாழ்க்கையைப் பயன்படுத்தாதீர்கள் என்று இந்திய அணியின் தேர்வுக் குழுவினரை கடுமையாகச் சாடியுள்ளார் மூத்த வீரர் கவுதம் கம்பீர்.

இங்கிலாந்து தொடரில் இருந்து இந்திய அணிக்குத் தேர்வாகியும் அணியில் இடம் பெற முடியாமல் பெஞ்சில் அமரவைக்கப்படும் வீரர் மயங்க் அகர்வால். மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்குத் தேர்வு செய்யப்பட்டும் ஒருபோட்டியில்கூட விளையாடாமல் பெஞ்சில் அமரவைக்கப்பட்டார்.

உள்ளூர் போட்டியில் சிறப்பாக பேட் செய்த மயங்க் அகர்வாலின் பேட்டிங் திறமையைச் சோதிக்காமல், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இருந்து அணி நிர்வாகம் நீக்கியது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் மிகவும் சொதப்பலாக பேட் செய்த கே.எல்.ராகுல், ரிஷாப் பந்த் ஆகியோருக்குத் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, இந்த ஆண்டு மட்டும் 2 ஆயிரம் ரன்கள் சேர்த்த மயங்க் அகர்வால் அணிக்குத் தேர்வாகியும் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெற முடியவில்லை.

இங்கிலாந்து தொடரில் எந்தவிதமான குறிப்பிடத் தகுந்த ஸ்கோரும் செய்யாமல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் நீக்கப்பட்ட முரளி விஜய், ஆஸ்திரேலியத் தொடருக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். ஆனால், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு இல்லை. ஆனால், நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும் இந்திய ஏ அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு அங்கு விளையாட மயங்க் அகர்வால் தலைமையில் அணி சென்றுள்ளது.

இது குறித்து மூத்த வீரர் கவுதம் கம்பீரிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:

''உண்மையிலேயே மயங்க் அகர்வால் மிகவும் துரதிஷ்டமான வீரர். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தும், அவரை விளையாடும் அணியில் சேர்க்க மறுக்கிறார்கள். மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கு மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், ஒரு போட்டியில் கூட வாய்ப்பு அளிக்காமல், தேர்வுக் குழுவினர் எந்தவிதமான காரணமும் இல்லாமல் ஆஸ்திரேலியத் தொடருக்கு தேர்வு செய்யவில்லை. மயங்க் அகர்வால் போன்ற இளம் வீரர்களின் வாழ்க்கையில் தேர்வுக்குழுவினர் என்ன மியூசிக்கல் சேர் விளையாடுகிறார்களா?

ஆனால், ஒவ்வொருவரிடமும் அகர்வால் சேர்க்கப்படுவார் என்று தேர்வுக் குழுவினர் கூறுகிறார்கள். துணைக் கண்டத்தில் விளையாடுவதற்கு மட்டும் வீரர்களுக்குப் பயிற்சி அளித்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் உள்ள காலநிலைக்கு ஏற்ப வீரர்கள் விளையாடப் பயிற்சி அளிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை இது துரதிருஷ்டமானது.

தேர்வுக் குழுவினர் ஆஸ்திரேலியத் தொடருக்கு முரளிவிஜய்யைச் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தால், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முரளி விஜய்யை நீக்கியிருக்கக்கூடாது. மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கு முரளி விஜய்யைத் தேர்வு செய்துவிட்டுகூட, நீங்கள் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இருந்து நீக்கி இருக்கலாம். ஆனால், மயங்க் அகர்வாலுக்கு பதிலாகக் கூட முரளி விஜய்யை அணியில் வைத்திருக்கவில்லை.

ஆனால், இப்போது முரளி விஜய்யை மீண்டும் அணியில் சேர்த்திருக்கிறீர்கள். மயங்க் அகர்வாலை இந்திய ஏ அணிக்கு அனுப்பிவிட்டீர்கள். இளம் வீரர்களின் வாழ்க்கையில் தேர்வுக் குழுவினர் அவர்கள் விருப்பப்படி முடிவெடுக்கக்கூடாது. நீங்கள் நல்ல வீரராக இருந்தால், ஒவ்வொரு சூழலிலும் நல்ல வீரராக இருக்க வேண்டும். ஆதலால், தேர்வுக் குழுவினர் முதலில் அணி வீரர்களைத் தேர்வு செய்வதில் உள்ள குழப்பமான நிலையில் இருந்து தெளிவு பெற்று, வீரர்களின் வாழ்க்கையில் மியூசிக்கல் சேர் விளையாடுவதை நிறுத்த வேண்டும்''.

இவ்வாறு கம்பீர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x