Published : 17 Nov 2018 09:10 PM
Last Updated : 17 Nov 2018 09:10 PM

ஆஸி.யின் சோகம் தொடர்கிறது; அலறவிட்ட மோரிஸ், இங்கிடி: டி20யில் தென் ஆப்பிரிக்கா பிரமாதம்

மோரிஸ், இங்கிடி ஆகியோரின் அபாரமான பந்துவீச்சால், கோல்ட் கோஸ்ட் நகரில் இன்று நடந்த டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது தென் ஆப்பிரிக்க அணி.

இதன் மூலம் ஆஸ்திரேலியா அணியின் தோல்வி தொடர்கிறது. ஏற்கெனவே கடைசி 3 போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த ஆஸ்திரேலிய அணி 4-வதாக இந்தப் போட்டியிலும் தோற்றுள்ளது. ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி தனது கடைசி 6 போட்டிகளிலும் தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் மட்டுமல்லாது பந்துவீச்சும் மிக மோசமாக அமைந்துள்ளது. அடுத்த வாரம் இந்திய அணியுடன் டி20 தொடரில் விளையாட உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி தோல்விக்கு மேல் தோல்வி அடைந்து நம்பிக்கை இழந்து காணப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி 2-1 என்று தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து, ஒரே ஒரு டி20 போட்டி கோல்ட் கோஸ்ட் மைதானத்தில் இன்று இரு அணிகளுக்கும் இடையே நடந்தது. போட்டி தொடங்கும் முன் மழை பெய்ததால், ஆட்டம் 10 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததை அறிந்த தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர்கள் டீகாக், ஹென்ட்ரிக்ஸ் அதிரடி ஆட்டத்தைக் கையாண்டனர்.

ஹென்ட்ரிக்ஸ் 8 பந்துகளில் ஒருசிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டீ காக் 22 ரன்களில் வெளியேறினார். கேப்டன் டூப்பிளசிஸ் 27 ரன்களும், கிளாசன் 12 ரன்களிலும் பெவிலியன் திரும்பினார்கள். 10 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியத் தரப்பில் ஆன்ட்ரூ டை, கோல்டர் நீல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

107 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

தென் ஆப்பிரிக்க அணியின் இங்கிடி, ரபாடா, மோரிஸ், பெகுல்க்வாயே ஆகியோரின் வேகப்பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். ஆஸ்திரேலிய அணியில் அதிபட்சமாக மேக்ஸ்வெல் மட்டும் 38 ரன்கள் சேர்த்தார்.  மற்ற வீரர்களான பிஞ்ச் 7, ஸ்டோய்னிஸ் 5, மெக்டர்மோட் 4, கேரே 8, லின் 14 ரன்கள் எனச் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். டி ஆர்கே கோல்டன் டக் அவுட்டில் நடையைக் கட்டினார்.

குறிப்பாக மோரிஸ், இங்கிடி ஆகியோரின் பந்துவீச்சில் ரன் சேர்க்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். 21 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணி 60 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பவர் ப்ளே ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 42 ரன்கள் சேர்த்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 27 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் இங்கிடி, மோரிஸ், பெகுல்க்வாயோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x