Published : 30 Aug 2014 10:04 PM
Last Updated : 30 Aug 2014 10:04 PM

3வது ஒருநாள் போட்டியில் எளிதில் வென்றது இந்தியா

டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.

முதலில் ஆடிய இங்கிலாந்து இந்திய சுழற்பந்து வீச்சில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க தொடர்ந்து ஆடிய இந்தியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்திய அணியில் ரஹானே 45 ரன்களையும், விராட் கோலி 40 ரன்களையும் எடுக்க அம்பாட்டி ராயுடு 77 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

சுரேஷ் ரெய்னா 42 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அதில் 5 பவுண்டரிகளை அடித்து ஸ்கோர் 207 ரன்களாக இருந்த போது அவுட் ஆனார். ஜடேஜா 12 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

டிரெட்வெல் வீசிய பந்தை மிட்விக்கெட் திசையில் தூக்கிவிட்டு 2 ரன்கள் ஓடியபோது இந்திய அணி வெற்றி பெற்றது.

ஷிகர் தவன் 16 ரன்கள் எடுத்து மீண்டும் சொதப்பினார். ஓரளவுக்கு சிரமம் இல்லாமல் ஆடிய அவர் வோக்ஸ் வீசிய பந்தை விளாசும் போது, கட் ஷாட்டை தரையில் ஆடாமல் நேராக பீல்டர் கையில் கேட்ச் கொடுத்தார்.

ரஹானே மிகவும் அற்புதமாக ஆடினார். அதுவும் வேகப்பந்து வீச்சாளர்களை எக்ஸ்ட்ரா கவர் மற்றும் கவர் திசையில் தூக்கி பவுண்டரிகளை விளாசியது கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் ஆட்டத்தை நினைவுபடுத்துவது போல் அமைந்தது.

அவர் 56 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் 45 ரன்கள் எடுத்து ஸ்டீவ் ஃபின் வீசிய பந்தை தேர்ட்மேன் திசையில் தட்டி விட தவறாக முடிவெடுத்து விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

விராட் கோலி, டிரெட்வெல் பந்தை நேராக சிக்சருக்கு அடித்தார். 2 பவுண்டரிகளில் ஒன்று அவரது சிக்னேச்சர் ஷாட் கவர் டிரைவ் இருந்தது. 40 ரன்களை எடுத்த அவர் மீண்டும் வலது கையை அழுத்தி ஒரு ஷாட்டை ஆட முயல மிட் ஆனில் டிரெட்வெல்லிடம் கேட்ச் கொடுத்து ஸ்டோக்ஸ் பந்தில் அவுட் ஆனார். அவரது வழக்கமான, அவரது பலமான ஷாட்டிலேயே அவர் அவுட் ஆவது நல்ல அறிகுறியாகத் தெரியவில்லை.

120/3 என்ற நிலையில் அம்பாட்டி ராயுடுவும், ரெய்னாவும் இணைந்தனர். 15 ஓவர்களில் 87 ரன்களைச் சேர்த்தனர்.

120/3 என்ற நிலையில் இங்கிலாந்து கொஞ்சம் நெருக்கடி கொடுத்திருக்கலாம் ஆனால் இங்கிலாந்து ஒன்றுமே செய்யவில்லை. டெஸ்ட் போட்டிகளில் இந்தியா எப்படி ஆடியதோ அதே போல் ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து ஆடியது.

ரெய்னாவுக்கு ஷாட் பிட்ச் பலவீனம் என்று தெரிந்திருந்தும் ஷாட் பிட்சை வீசி அவரை தொந்தரவு செய்யவில்லை. ஃபுல் லெந்த்தில் வீசியது இங்கிலாந்து, குட் லெந்த்தில் வீசியது இந்திய பேட்ஸ்மென்களுக்கு பிரச்சினைகளைக் கொடுக்கவில்லை.

ராயுடு 63 பந்துகளில் அரைசதம் கண்டார். ரெய்னா. 42 ரன்களில் டிரெட்வெல் பந்தை அடித்து ஆட அதனை வோக்ஸ் அருமையாக கேட்ச் பிடித்தார். ஆனால் இந்தியா 40.2 ஓவர்களில் 207/4 என்று வெற்றியை உறுதி செய்து விட்டது.

ஆட்டநாயகனாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சிக்கனமாக வீசிய அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x