

அரையிறுதியில் அனுபவமிக்க வீரரான மிதாலி ராஜை நீக்கியது தவறு என எழுந்த விமர்சனங்களுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பதிலளித்திருக்கிறார்.
ஆன்டிகுவாவில் நடந்த மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது இங்கிலாந்து அணி.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 19.3 ஓவர்களில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 24 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார். ரோட்ரிக்ஸ் 26 ரன்களும், கேப்டன் கவுர் 16 ரன்களும் சேர்த்தனர். மற்றவர்கள் குறைந்த ரன்களில் வெளியேர இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
இந்தி நிலையில் முக்கியமான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிறந்த ரன் சேர்பாளருமான மிதாலி ராஜ்ஜை நீக்கியது மிகப் பெரிய தவறு என்றும், இதன் காரணமாக இந்திய அணி குறைந்த ரன்கள் சேர்ந்தது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதற்கு இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பதிலளித்திருக்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஹர்மன்பிரீத் கவுர் கூறும்போது, ‘‘நாங்கள் எடுத்த முடிவு அணிக்காக எடுத்த முடிவு. சில நேரங்களில் இது வெற்றியை தரலாம். சில நேரம் இது தோல்வியை தரலாம். ஆனால் இந்த முடிவுக்காக நாங்க வருத்தப்படவில்லை.
எனது அணி வீரர்கள் விளையாடியதை கண்டு நான் பெருமைக் கொள்கிறேன். நாங்கள் ஆஸ்திரேலிய அணியுடன் கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடினோம். அதற்காகவே அதில் அனுபவப்பட்ட வீரர்களை தேர்வு செய்தோம்.
நாங்கள் 140 - 150 ரன்கள் எடுத்திருந்தால் நிச்சயம் வென்றிருக்கலாம். ஆனால் தோல்வியும் விளையாட்டில் ஒரு அங்கம்தான். நாங்கள் இளம் வீரர்களை கொண்ட அணி. இப்போதுதான் கற்றுக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.