Published : 12 Nov 2018 07:20 PM
Last Updated : 12 Nov 2018 07:20 PM

பிராட்மேன், லாரா, சேவாக் ஆகிய ‘பெரிய வீரர்கள்’ பட்டியலில் இணைந்த உலக சாதனை நாயகன் முஷ்பிகுர் ரஹீம்

வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் தனது உலக சாதனை இரட்டைச் சதத்துக்குப் பிறகு மைதானத்தில் மெக்கா இருக்கும் திசையை நோக்கி மண்டியிட்டு தொழுதார்.

அதாவது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு விக்கெட் கீப்பரும் 2 இரட்டைச் சதங்கள் எடுத்ததில்லை, அதனை இன்று சாதித்தார் முஷ்பிகுர் ரஹீம்.

மாரத்தான் இன்னிங்ஸான இதில் இரட்டைச் சதம் அடித்த பிறகு வழக்கமான பாணியில் புனிதத் தலமான மெக்கா இருக்கும் திசையை நோக்கி மண்டியிட்டு தொழுதார்.

முஷ்பிகுர் ரஹீமின் 219 நாட் அவுட் வங்கதேச வீரர் ஒருவரின் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராகும். கடந்த ஜனவரி 2017-ம் ஆண்டு ஷாகிப் அல் ஹசன் நியூசிலாந்தில் எடுத்த 217 ரன்களை முந்தினார் முஷ்பிகுர். இதில் டான் பிராட்மேன், ஜார்ஜ் ஹெட்லி, வினூ மன்கட், பிரையன் லாரா, சேவாக்,  ஆகியோருக்கு அடுத்தபடியாக தன் நாட்டின் தனிப்பட்ட அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் சாதனையை முறியடிக்க 2வது முறையாக இரட்டைச் சதம் அல்லது அதற்கும் கூடுதல் ரன்களை எடுத்து சாதனையைக் கடந்த  முஷ்பிகுர் ரஹிம், இதனை அடுத்து பெரியோர் பட்டியலில் இணைந்தார்.

முஷ்பிகுர் தற்போது டெஸ்ட்டில் 3962 ரன்கள் சேர்த்துள்ளார், இன்னும் 87 ரன்கள் எடுத்தால் வங்கதேச அதிக டெஸ்ட் ரன்களுக்கான தமீம் இக்பால் சாதனையை முறியடிப்பார்.

219 ரன்களுக்கு 421 பந்துகள் ஆடினார் முஷ்பிகுர் ரஹீம், ஒரு வங்கதேச வீரர் அதிகப் பந்துகளை எதிர்கொண்ட வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

மேலும் விக்கெட் கீப்பராக முஷ்பிகுர் எடுத்த 219 டெஸ்ட் ரன்கள் 4வது அதிகபட்ச ரன்களாகும். ஜிம்பாப்வேயின் ஆண்டி பிளவர் 2000-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக 232 ரன்கள் எடுத்ததுதான் சாதனையாக இருந்து வருகிறது. மேலும் ஜிம்பாப்வேவுக்கு எதிராக அதிக ரன்களை எடுத்த விக்கெட் கீப்பர் குமார் சங்கக்காரா இவர் 128 ரன்களை ஒருமுறை எடுத்தார்.

முஷ்பிகுர் ரஹீமின் முதல் இரட்டைச் சதம் 2013ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக  கால்லே மைதானத்தில் எடுக்கப்பட்டது. முஷ்பிகுர் ரஹீம் 589 நிமிடங்கள் பேட் செய்தார், வங்கதேச வீரராக இது மிகவும் நீண்ட இன்னிங்ஸ் ஆகும்.  இதற்கு முன்பாக இந்தியாவுக்கு எதிரான வங்கதேசத்தின் முதல் டெஸ்ட் போட்டியில் அமினுல் இஸ்லாம் 145 ரன்களை 535 நிமிடங்களில் எடுத்ததே சாதனையாகும்.

 

ஆதாரம்: ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x